Youth arrested pt desk
குற்றம்

சென்னை: ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் ரூ.1 கோடியே 20 லட்சம் மோசடி - இளைஞர் கைது

ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறி, 1 கோடியே 20 லட்சம் ரூபாயை மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த இளைஞரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

சென்னை அம்பத்தூர் அடுத்த பள்ளிக்குப்பத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (57). ஷேர் மார்க்கெட்டில் வேலை செய்து வரும் இவர், கடந்த மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில், புகார் ஒன்று அளித்திருந்தார்.

அதில், “கடந்த ஓராண்டுக்கு முன், எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு, 'ஆன்லைன் டிரேடிங்' குறித்து விளம்பரம் ஒன்று வந்தது. அந்த விளம்பரத்தை பார்த்து, அதில் கொடுக்கப்பட்டிருந்த மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினேன். அதில் பேசிய மர்ம நபர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால், நல்ல கமிஷன் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்.

ஆவடி மத்திய குற்றப்பிரிவு

அதை நம்பி, ஆன்லைன் டிரேடிங்கில் சேர்ந்து, மர்ம நபர்கள் கொடுத்த வங்கிக் கணக்குகளில், பல தவணைகளாக 1 கோடியே 20 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தேன். இந்நிலையில், நான் முதலீடு செய்த தொகையில், எனது கமிஷனை எடுக்க முயன்றபோது, எனது வங்கிக் கணக்கு செயலிழந்து விட்டது. முதலீடு செய்த தொகை, லாபத்தொகை என எதுவுமே எடுக்க முடியாத சூழலில் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரித்த ஆவடி சைபர் க்ரைம் போலீசார், திருவள்ளுார் மாவட்டம், மணவூரைச் சேர்ந்த கிரிதரன் (23) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி கும்பல், பல மாநிலத்தைச் சேர்ந்த பலரிடம் பல கோடி ரூபாய் ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது.

ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர்

இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். இதையடுத்து “தேவை இன்றி செல்போனில் வரும் மோசடி விளம்பரம் மற்றும் லிங்குகளை பொதுமக்கள் கவனத்துடன் கையாள வேண்டும். விழிப்புடன் இருக்க வேண்டும்” என ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் அறிவுறுத்தியுள்ளார்.