சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் விபத்து புதிய தலைமுறை
குற்றம்

சென்னை: விபத்து நடந்த சைதாப்பேட்டை பெட்ரோல் பங்கிற்கு சீல் வைப்பு; உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

சென்னை சைதாப்பேட்டை பெட்ரோல் விற்பனை நிலைய மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Jayashree A

காற்றுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது.

சென்னையில் நேற்று மாலையில் திடீரென்று பெய்த கனமழையில் நனையாமல் இருக்க மக்கள் ஆங்காங்கே ஒதுங்கினர். அதேபோல் சைதாப்பேட்டையில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மழைக்காக சுமார் 50 பேர் வரை ஒதுங்கியிருந்த நேரத்தில் திடீரென்று மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கந்தசாமி என்ற நபர் உயிரிழந்த நிலையில் 18 நபர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், மொத்தம் 13 இருசக்கர வாகனங்கள், ஒரு சைக்கிள் என 14 வாகனங்கள் சேதம் ஆகி உள்ளன. பெட்ரோல் பம்ப் முழுவதும் சேதம் ஆகியுள்ளது.

சைதாப்பேட்டை போலீசார் பெட்ரோல் பங்க் முழுவதும் பேரிகார்டு வைத்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு வந்த இந்தியன் ஆயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சேதமடைந்த பொருட்களின் மதிப்பை கணக்கெடுத்து வருகின்றனர்.

அஜாக்கிரதையாக செயல்பட்டு பிறருக்கு மரணம் விளைவித்தல் என்று பிரிவின் கீழ் பெட்ரோல் பங்க்-ன் உரிமையாளர் அசோக் மற்றும் மேலாளர் வினோத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து சைதாப்பேட்டை போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து குறித்து நிகழ்விடத்துக்கு சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.சைதாப்பேட்டை இந்தியன் பெட்ரோல் பங்க் விபத்து தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.