Accused pt desk
குற்றம்

சென்னை: ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் மோசடி - பாஜக ஒன்றிய தலைவர் கைது

அம்பத்தூர் அருகே ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி மதிப்பிலான நில மோசடி செய்த புகாரில் சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகி ஒருவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

சென்னையில் கிண்டியின் மடுவங்கரை பகுதியைச் சேர்ந்தவர் முகைதீன் பாத்திமா பீவி (64). இவர், கடந்த 1990-ஆம் ஆண்டு அம்பத்தூர் அருகே கள்ளிகுப்பம் பகுதியில் 2,347 சதுரடி நிலத்தை ஏழுமலை மற்றும் தனசேகர் ஆகியோரிடம் இருந்து விலைக்கு வாங்கி வைத்திருந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு முகைதீன் பாத்திமா பீவி நிலம் தொடர்பாக வில்லங்கச் சான்று போட்டு பார்த்துள்ளார்.

Commissioner office

அப்போது, இவரது பெயரில் போலியான ஆள்மாறாட்டம் செய்து, பத்மநாபன் என்பவர் சிலருடன் சேர்ந்து போலியான பொது அதிகார பத்திரம் தயார் செய்து, நிலத்தை பதிவு செய்தது தெரியவந்தது. மேலும், பாலகிருஷ்ணன், பிரபு, வேலு ஆகியோருக்கு நிலத்தை பிரித்து பத்மநாபன் விற்பனை செய்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து முகைதீன் பாத்திமா பீவி ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்மையில் புகார் அளித்தார்.

இதனிடையே நிலப் பிரச்னை தீர்வுப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக செங்குன்றம், சோலைமாநகர் பகுதியைச் சேர்ந்த பாஜக ஒன்றியத் தலைவர் பத்மநாபனை (49) போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.