சென்னை முகப்பேரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஏஆர்டி நிதி நிறுவனத்தில் 1500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முதலீடு செய்த பொதுமக்கள் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் முதலீடுகளை பெற்று அவர்களுக்கான மாத தொகையை சரியாக வழங்காமல் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் பல கட்டங்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அதிக வட்டி தருவதாகக் கூறி ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்த புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
குறிப்பாக, பல மாதங்களாக நிறுவனத்தின் இயக்குனர்களான ஆல்வின் ஞானதுரை மற்றும் ராபின் ஆகியோர் வெளிநாட்டில் பதுங்கி இருந்த நிலையில், அவர்களுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இயக்குனர்களான ஆல்வின் ஞானதுரை மற்றும் ராபினை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இருவரையும் நொளம்பூரில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான நகைக்கடை மற்றும் ஷாப்பிங் மாலுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.