குற்றம்

செங்கல்பட்டில் எரிந்தநிலையில் ஆண் சடலம் - கடத்தி கொலை செய்த காவலர்? பகீர் பின்னணி

செங்கல்பட்டில் எரிந்தநிலையில் ஆண் சடலம் - கடத்தி கொலை செய்த காவலர்? பகீர் பின்னணி

நிவேதா ஜெகராஜா

சென்னையில் காணாமல் போனவரின் உடல் செங்கல்பட்டில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கே.கே நகர் விஜயராகவபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 26). இவர் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 1ஆம் தேதி ரவி தனியாக வீட்டிலிருந்த போது மூன்று பேர் கோயம்பேடு காவல் நிலையத்தில் இருந்து வருவதாக கூறி ரவியை விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ரவியின் மனைவி ஐஸ்வர்யா இந்த தகவலறிந்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்த போது, அப்படி யாரையும் அழைத்து வரவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா தனது கணவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கடந்த 4ஆம் தேதி கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையின் போது தனது வீட்டின் அருகே செம்பியம் காவல் நிலைய காவலரான செந்தில்குமார் என்பவர் அவரது காதலியுடன் வசித்து வந்ததாகவும், செந்தில்குமாருடன் இணைந்து தனது கணவர் ரவி தினமும் மது அருந்தி வந்ததாகவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தங்களது குழந்தை ஜெசிகா, செந்தில்குமாரின் வீட்டருகே சிறுநீர் கழித்ததால், செந்தில்குமாரின் குடும்பத்தோடு தங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டதாகவும், அப்போது தனது கணவர் ரவியை செந்தில்குமார் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது கணவர் காணாமல் போன அந்த நாளே செந்தில்குமார் குடும்பத்துடன் வீட்டை காலி செய்துவிட்டு சென்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், தனது கணவரை செந்தில்குமார் கடத்தி சென்றிருப்பதாக சந்தேகிப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் Missing என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, காவலர் செந்தில்குமார் வீட்டில் விசேஷம் எனக்கூறி கடந்த 28ஆம் தேதி முதல் பணிக்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த கே.கே நகர் போலீசார் தனிப்படை அமைத்து காணாமல் போன இருவரது செல்போன் எண்ணை வைத்து தீவிர விசாரணை நடத்தியதில், ஈக்காட்டுதாங்கல், ராமாபுரம் என காண்பித்து பின்னர் செல்போன் எண் ஸ்விட்ச் ஆகியிருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் செங்கல்பட்டு அருகே எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக படாளம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் போலீசார் அந்த சடலத்தை மீட்டுள்ளனர். காணாமல் போன ரவியின் உடலா என முழுமையாக உறுதிசெய்து அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் செந்தில்குமாரின் காதலியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போதைக்கு அது ரவியின் உடல் என உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இது கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.