சென்னையில் பகலில் இருசக்கர வாகன மெக்கானிக்காவும், இரவில் இருசக்கர வாகன திருடனாகவும் வலம் வந்த நபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடு போவதாக காவல் நிலையங்களில் தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத் மற்றும் திருவொற்றியூர் உதவி ஆணையர் முஹமது நாசர் தலைமையில் தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு குமார் என்பவர், திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்ததாகவும், அது காணாமல் போனதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், தண்டையார்பேட்டை பரமேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் இருசக்கர வாகனங்களை திருடிச் செல்வது தெரியவந்தது. இதனையடுத்து ஜெகனை கைது செய்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கைது செய்யப்பட்ட ஜெகன், அந்த பகுதியில் 5 ஆண்டுகளாக டூவீலர் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருவதும், காலையில் மெக்கானிக் வேலை செய்தும், இரவு நேரத்தில் தண்டையார்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டு வாசல்கள், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களை கள்ளச்சாவி போட்டு திருடி சென்று, காஜா மைதீன் என்பவரிடம் விற்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து காஜாமைதீனையும் காவல் துறையினர் கைது செய்தனர். கடந்த 5 ஆண்டுகளாக பகலில் மெக்கானிக்காகவும், இரவில் இருசக்கர வாகனங்களை திருடும் நபரை கைது செய்த தனிப்படையினரை காவல்துறை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.