குற்றம்

கஞ்சா விற்பனை பற்றி போலீசாரிடம் கூறியவரை கொலை செய்த கும்பல்!

கஞ்சா விற்பனை பற்றி போலீசாரிடம் கூறியவரை கொலை செய்த கும்பல்!

webteam

சென்னையில் கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்ததால், திமுக பிரமுகர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேடு - இந்திரா நகரைச் சேர்ந்த குப்பன் என்பவர், காசிமேடு பகுதி திமுக பிரதிநிதியாகவும், விசைப்படகு மீனவர் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் காசிமேடு மேம்பாலம் அருகே நடந்து சென்றபோது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது. சுற்றி வளைத்த அந்த கும்பல், குப்பனை அரிவாளால் கண்மூடித்த‌னமாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியுள்ளது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தினர், குப்பனின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த அட்டு ரமேஷ் மற்றும் சம்பத் ஆகிய இருவரும் இணைந்து அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. கஞ்சா விற்பனையை நிறுத்திக் கொள்ளுமாறு அட்டு ரமேஷிடம் குப்பன் கூறியுள்ளார். ஆனால் ரமேஷ் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார்.

இதனையடுத்து கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு குப்பன் தகவல் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அட்டு ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் குப்பனை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அட்டு ரமேஷை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள சம்பத், ராகேஷ் மற்றும் சந்தோஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.