செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு சொந்தமான 3 ஆயிரம் சதுரடி நிலம் திருமுல்லைவாயில் சரஸ்வதி நகரில் உள்ளது. அதனை அதே பகுதியைச் சேர்ந்த ஆதிகேசவன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதாக ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள ஆவடி மத்திய குற்றப் பிரிவில் ரவி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், “கடந்த 1985 ஆம் ஆண்டு தேனப்பன் என்பவர் திருமுல்லைவாயில் சரஸ்வதி நகரில் 3600 சதுரடி நிலத்தை தனியர் நிறுவனத்திடமிருந்து கிரையம் பெற்றுள்ளார். அப்போது நிலத்தை பார்த்துக்கொள்ள அருகே உள்ள ஆதிகேசவன் என்பவரை காவலாளியாக இருக்கக் கூறியிருக்கிறார். அப்போது முதல் அந்த நிலத்தை ஆதிகேசவன் அங்கேயே தங்கி கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், 1991 ஆம் ஆண்டு தேனப்பன் உயிர் இழந்ததை அடுத்து அவரது மகன் பழனியப்பன் நிலத்தை கவனித்து வந்த ஆதிகேசவனுக்கு 532 சதுரடி நிலத்தை விற்பனை செய்துள்ளார். மீதமுள்ள 3068 சதுரடியை ரவி என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இதனிடையே நிலத்தை கவனித்துக் கொண்டிருந்த காவலாளி ஆதிகேசவன் மொத்த நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்து போலி ஆவணமும் தயாரித்து வைத்துள்ளார்” என்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆதிகேசவனை கைது செய்த ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நிலத்தை மீட்டதோடு கைது செய்த ஆதிகேசவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.