செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை அமைந்தக்கரை மேத்தா நகர், சதாசிவ மேத்தா தெரு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஸ் (35). பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வரும் இவருக்கு நிவேதா (எ) நாசியா என்ற பெண்ணுடன் காதல் திருமணமாகி 6 வயது குழந்தையுடன் வசித்து வருகின்றார்.
இந்நிலையில், நவாஸ் வீட்டில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் வீட்டு வேலைக்கான பணியில் இருந்துள்ளார். சிறுமி நவாஸ் வீட்டிலேயே தங்கி வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், நவாஸ் தனது வழக்கறிஞர் மூலமாக காவல்நிலையத்திற்கு தகவல் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றினை தெரிவித்துள்ளார். அதாவது, “தீபாவளியன்று எனது வீட்டில் வேலை செய்து வந்த சிறுமி, பாத்ரூமில் குளிக்கச் சென்றார். அப்போது நீண்ட நேரமாகியும் குளிக்கச் சென்ற சிறுமி வெளியே வராததால் சந்தேகமடைந்த நானும் மற்றும் எனது மனைவி நாசியாவும் பாத்ரூம் கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தோம். அப்போது சிறுமி, சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்.
இதனால் பயத்துபோன நான், வீட்டை பூட்டிவிட்டு மனைவி குழந்தையுடன் உறவினர்கள் வீட்டிற்குச் சென்று விட்டோம்” என்று தெரிவித்துள்ளார். நவம்பர் ஒன்றாம் தேதி மாலை நவாஸ் தனது வழக்கறிஞர் மூலம் சிறுமி இறந்தது குறித்து அமைந்தக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் அமைந்தகரை போலீசார் சம்பவயிடத்துக்குச் சென்று பாத்ரூமில் இறந்து கிடந்த சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி உடலில் அங்கங்கே அடித்ததற்கான காயங்களும், சிகரெட்டால் சூடு வைத்த காயங்களும் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார், கணவன் - மனைவி இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவன் மனைவி இருவரும் சிறுமியை அடித்து துன்புறுத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தீபாவளி தினத்தன்று காலை நவாஸ், நாசியா மற்றும் இவர்களது நண்பர் லோகேஷ் அவரது மனைவி ஜெயசக்தி ஆகியோர் சேர்ந்து கொடூரமாக தாக்கி உள்ளனர். லோகேஷ் காலால் எட்டி உதைத்ததும், பின்னர் அயன்பாக்ஸால் சிறுமியின் மார்பகத்தில் சூடு வைத்ததும் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் சிறுமி மயக்கமடைந்து மூர்ச்சையாகி உள்ளார். இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் மூவரும் சேர்ந்து சிறுமியை பாத்ரூமுக்குள் இழுத்துச் சென்று போட்டுள்ளனர். இதையடுத்து பயந்துபோன கணவன், மனைவி, ஊதுபத்தி ஏற்றி வைத்துவிட்டு தங்களது உறவினர்கள் வீட்டிற்குச் சென்று பதுங்கி உள்ளனர்.
பின்னர், லோகேஷ் மூலம் வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர் என்பதுபோலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அமைந்தகரை போலீசார், கணவன் மனைவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள லோகேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். லோகேஷ் மீது விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் அவரது மனைவி ஜெயசக்தி (24), முகமது நிசாத்தின் அக்கா சீமா (39), முகமது நிசாதின் வீட்டில் பணி பெண்ணாக பணிபுரிந்து வந்த மகேஸ்வரி (44) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், சந்தேக மரணம் பிரிவை மாற்றி கொலை, போக்சோ, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை சட்டம், சிறார் நீதி சட்டம் (குழந்தைகளை பணியமர்த்துதல்) உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனிடையே பிரேத பரிசோதனைக்கு பிறகு, சொந்த ஊருக்கு சடலத்தை கொண்டு சென்று இறுதி காரியம் செய்ய போதிய வசதி இல்லை என போலீசாரிடம் சிறுமியின் தாய் உள்ளிட்ட உறவினர்கள் கூறியதால் சென்னை அண்ணாநகர் வேலங்காடு சுடுகாட்டில் சிறுமியின் உடல் எரியூட்டப்பட்டது.