குற்றம்

“20 லட்சத்தோடு வீட்டுக்கு வா”: வரதட்சணைக்குப் பலியான ஜீவிதாவின் சோகக் கதை

“20 லட்சத்தோடு வீட்டுக்கு வா”: வரதட்சணைக்குப் பலியான ஜீவிதாவின் சோகக் கதை

webteam

சென்னை பாரிமுனை, ஜார்ஜ்டவுன் பிடாரியார் கோயில் தெருவைச் சேர்ந்த கீதா மகள் ஜீவிதா (25). நர்சிங் கோர்ஸ் முடித்துள்ள ஜீவிதா சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதியன்று ஆவடி சேக்காட்டைச் சேர்ந்த முரளி என்பவரின் மகன் ரோஸ் என்பவருடன் பெற்றோர்கள் முன்னிலையில் ஜீவிதாவுக்குத் திருமணம் செய்து வைத்தனர். 

சாஃப்ட்வேர் இன்ஜினியரான ரோஸ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணம் ஆன நாளில் இருந்து ரோசின் தந்தை முரளி, தாய் சாந்தலட்சுமி, தங்கை சுமதி, அவரது கணவர் நாகேஷ் ஆகியோர் ஜீவிதாவிடம் வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்துள்ளனர். 

மேலும் ரோசுக்கு தான் பணியாற்றும் அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது குறித்து ஜீவிதா, கணவரிடம் கேட்டதற்கு அதனை ஒப்புக் கொண்டதுடன் ஜீவிதாவை அடித்து உதைத்துள்ளார். இதனால் மனம் உடைந்த ஜீவிதா கடந்த 3ம் தேதி தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை செல்லும் மின்சார ரயிலில் ஏறி பயணம் செய்துள்ளார். ரயில் கிண்டிக்கும்சைதாப்பேட்டைக்கும் இடையில் அடையாறு ஆற்றின் மேல் வேகமாக சென்று கொண்டிருந்த போது  திடீரென ரயில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் மாம்பலம் ரயில்வே போலீசார் ஜீவிதாவின் உடலை அடையாற்றில் இருந்து தீயணைப்புப் படையினர் மூலம் மீட்டனர். உடலை பிரதேப் பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஜீவிதாவின் பெற்றோருக்கு போன் செய்து அவர் தற்கொலை செய்து கொண்ட விவரத்தை கூறியுள்ளனர்.

இந்நிலையில் ஜீவிதாவின் தாயார் கீதா சென்னை மாம்பலம் ரயில்வே போலீசில் மகளின் தற்கொலைக்கான காரணம் குறித்து புகார் அளித்துள்ளார்.அதில் அவர் கூறியிருந்ததாவது, ‘என் மகள் ஜீவிதா திருமணம் ஆன நாள் முதல் அவளது கணவர் வீட்டில் வரதட்சணை கேட்டு மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். அது குறித்து என்னிடம் அடிக்கடி போன் செய்து அழுவாள். நாங்களும் எங்களால் முடிந்த அளவு நகை, பணம் ஆகியவற்றை கொடுத்து ஆறுதல் சொல்லி அனுப்புவோம். மேலும் எனது மகளின் வங்கி ஏடிஎம் கார்டை மாமனார் முரளி வாங்கி வைத்துக் கொண்டார். மாதா மாதம் சம்பளப் பணத்தை அவரே எடுத்து வைத்துக் கொள்வார்.

இந்நிலையில் எனது மகளுக்கு பிறந்த குழந்தையையும் ஜோதிடரின் சொல்லைக் கேட்டு 8 மாதத்திலேயே ஆபரேஷன் செய்து வெளியில் எடுத்து விட்டனர். இதனால் எனது மகள் உடலளவில் மிகவும் பாதிப்படைந்தார். 
மகளின் கணவர் ரோசுக்கு அவர் பணியாற்றும் அலுவலகத்தில் சகானா என்ற பெண்ணுடன் இருந்த கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டதற்கு எனது மகளை அடித்து உதைத்துள்ளார். 

என் மகள் சாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ரோஸ் என் மகள் பணிபுரியும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று, ‘இனி நீ எனது வீட்டுக்கு வந்தால் 20 லட்சம் ரூபாய் பணத்துடன் வா. இல்லையென்றால் செத்துப்போ’ என தரக்குறைவாகப் பேசி பலர் முன்னிலையில் அவமானப்படுத்தியுள்ளார்.மேலும் விவாகரத்து பத்திரங்களிலும் கையெழுத்து போடச்சொல்லி மிரட்டியுள்ளனர். இதனால் மனம் உடைந்துதான் என் மகள் கீதா ரயிலில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்ளப்போன அன்று மதியம் 12 மணியளவில் என் மகள் எனக்கு போன் செய்து ‘அம்மா நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்’ என் குழந்தையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என கூறி அழுது விட்டு போனை வைத்து விட்டாள். போனையும் அணைத்து வைத்து விட்டார். 

பின்னர் 1.30 மணியளவில் மாம்பலம் ரயில்வே போலீசார் போன் செய்து என் மகளின் தற்கொலை குறித்து தகவல் தெரிவித்தனர். என் மகளின் சாவுக்கு காரணமான அவரது கணவர் ரோஸ், மாமனார் முரளி, மாமியார் சாந்தலட்சுமி, மச்சினி சுமதி, அவரது கணவர் நாகேஷ் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு அந்தப் புகார் மனுவில் கூறியுள்ளார். 

இப்புகார் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் புகார் மாம்பலம் அனைத்து மகளிர் போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்படும் என தெரிகிறது.ஜீவிதா மகள் வைசாலிக்கு ஒரு வயதுதான் ஆகிறது.