ஃபேஸ்புக் மூலம் பழகி வெளிநாட்டு பெண்ணை திருமண செய்து கொள்வதாக கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.
சைப்ரஸ் நாட்டில் வசித்து வரும் பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் ஒன்றை அனுப்பினார். அந்தப் புகாரில் சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் அருண் பிரகாஷ் என்பவர் தன்னிடம் ஃபேஸ்புக் மூலம் நண்பராக அறிமுகமாகி பின்னர் வாட்ஸ்அப் எண்ணைப் பெற்றுக்கொண்டு தன்னை தொடர்புகொண்டு தொடர்ந்து பழகி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த நபர் தன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி தன்னிடமிருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டதாகவும், அதன் பின்பு தன்னுடன் தொடர்பை துண்டித்துக் கொண்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ள அவர், அருண் பிரகாஷ் பின் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட விவரம் சமீபத்தில் தனக்கு தெரியவந்ததால் தன்னை ஆசைவார்த்தைகள் கூறி ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட அருண் பிரகாஷ் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டுத்தரும்படி புகாரில் தெரிவித்திருந்தார்.
இப்புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த அருண் பிரகாஷ் சைப்ரஸ் நாட்டில் வசித்து வரும் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி 10 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று ஏமாற்றியது ஆதாரங்கள் மூலம் தெரிய வந்தது. அதனடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நேற்று அருண் பிரகாஷை அவரது வீட்டில் வைத்து கைது செய்து அவரிடமிருந்து பணம் மோசடிக்குப் பயன்படுத்திய வங்கி கணக்கு, ஏ.டி.எம் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணைக்குப்பின் போலீசாரால் அருண் பிரகாஷ் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெண்கள் சமூக வலைதளங்கள் மூலம் பழகும் முன் பின் தெரியாத ஆண்கள் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாமென சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.