செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை நங்கநல்லூர் கனிகா காலனி முதல் தெருவை சேர்ந்தவர் கோகுல் நாயுடு. இவர், பாஜகவில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவரது முகநூல் பக்கத்தில் ஒரு இஸ்லாமிய பெண், இந்து சாமியாருடன் அமர்ந்திருப்பது போன்ற சர்ச்சைமிக்க ஒரு படத்தை பதிவிட்டு அதில், "முஸ்லீம் பெண்கள் இந்து பசங்களை திருமணம் செய்ய வேண்டும். இதன் மூலம் முஸ்லீம் பெண்கள் முத்தலாக், ஹலாலாவில் இருந்து விடுபட்டு தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம்" என பதிவிட்டுள்ளார்.
இந்த சர்ச்சை பதிவை பார்த்த இஸ்லாமியர்கள் பலரும் மத மோதலை உருவாக்க நினைக்கும் இவரை கைது செய்ய வேண்டும் என பதிவு செய்து கண்டனத்தை தெரிவித்தனர்.
இதனையடுத்து பழவந்தாங்கல் காவல் துறையினர், இஸ்லாமிய அமைப்பினர் அளித்த புகாரை பெற்று பாஜகவை சேர்ந்த கோகுல் நாயுடுவை கைது செய்து, அவர் மீது மத மோதலை தூண்டும் வகையில் எழுதுவது, மத உணர்வுகளை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.