குற்றம்

இண்டர்போல் உதவியுடன் பிடிப்பட்ட வங்கிக்கொள்ளையன்: பணம், நகை எங்கே?

இண்டர்போல் உதவியுடன் பிடிப்பட்ட வங்கிக்கொள்ளையன்: பணம், நகை எங்கே?

webteam

சென்னையில் வங்கியை கொள்ளையடித்த நபரை நேபாளத்திலிருந்து அழைத்து வர சென்னை போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். 

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஐஓபி வங்கியில் கடந்த சனி, ஞாயிறு விடுமுறை தினத்தில், லாக்கரை உடைத்து ரூ.32 லட்சம் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையடிக்கப்பட்ட தினத்திலிருந்து வங்கியின் காவலாளியாக இருந்த சபிலால் தலைமறைவாக இருந்து வந்தார். 

அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் தியாகராயநகர் துணை ஆணையர் அரவிந்தன் தலைமையிலான 5 தனிப்படையினர் அவரை தேடிவந்தனர். இதையடுத்து அவர் நேபாளத்தில் பதுங்கியிருப்பதை கண்டறிந்த போலீஸார், இண்டர்போல் உதவியுடன் சபிலால் கைது செய்துள்ளனர். இருப்பினும் அவரது மகன் திலு லால் மட்டும் இன்னும் தலைமறைவாகவே உள்ளார். பிடிபட்ட சபிலாலை நீதிமன்றம் மூலமாக சென்னைக்கு அழைத்துவரும் சட்ட நடவடிக்கைகளில் தமிழக தனிப்படை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக நேபாள காவல்துறையினருடன், தமிழக காவலர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னையில் காவலாளியாக உள்ள பகதூர் மற்றும் கார் ஓட்டுநர் பிரதாப் ஆகிய இருவரையும் கைது செய்துள்ள காவல்துறையினர், இந்தக் கொள்ளை சம்பவத்திற்கு இருவரும் எந்தெந்த வகையில் உதவினார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியின் பாதுகாப்பு அறையில் இருந்த 259 மற்றும் 654 என்ற இரு லாக்கர்களை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட, பணமும், நகைகளும் எங்கே இருக்கிறது என்ற விசாரணையிலும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.