குழந்தைக்கு ஆசீர்வாதம் செய்ய வாருங்கள் என அழைத்துச் சென்று தங்க நகைகளை திருடிய பலே திருடனை போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை துவாரகா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ரவணம்மா (65). இவரது மகன் பிரசாத் பாரதிய ஜனதா கட்சியில் பிற்படுத்தப்பட்டோர் அணியின் தென் சென்னை மாநில பொதுச் செயலாளராக இருக்கிறார். இந்நிலையில், ரவணம்மா மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே நடந்து சென்றுள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர், சாலையோரம் நடந்து சென்ற ரவணம்மாவை வழிமறித்து, அருகில் இருந்த வீட்டை காண்பித்து அங்கு குழந்தைக்கான நிகழ்ச்சி நடப்பதாகவும், அந்த குழந்தையை ஆசீர்வதிக்க பெரியவர்களை குடும்பத்தினர் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். குழந்தையை ஆசீர்வதிக்கதானே என்று அந்த நபருடன் சென்ற ரவணம்மாவை, வீட்டிற்குள் கீழ் படியில் அமர வைத்துவிட்டு, யாரிடமோ செல்போனில் பேசுவதுபோல் பாவனையுடன் படியில் ஏறிச்சென்றுள்ளார்.
பின்னர் மீண்டும் ரவணம்மாவிடம் வந்த அவர், குழந்தையின் பெற்றோர் பெரும் செல்வந்தவர்கள் எனவும், குழந்தையை ஆசீர்வாதம் செய்யும் முதியவர்களுக்கு தங்க மோதிரம் தருவதால், மாடல் காண்பித்து வருவதாக மூதாட்டியின் கையில் இருந்த மூன்று மோதிரங்களையும் வாங்கிச் சென்றுள்ளார்.
இதையடுத்து அந்த வீட்டில் இருந்த காவலாளி தனியாக அமர்ந்திருந்த ரவணம்மாவிடம் விசாரித்தபோது, அந்த நபர் ஏமாற்றி நகை பறித்துச் சென்றது தெரியவந்தது. நகைகளை பறிகொடுத்த ரவணம்மா மயிலாப்பூர் போலீசில் புகார் கொடுத்தார். புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவணம்மா கூறிய அடையாளங்களை வைத்து விசாரித்ததில், இதே பாணியில் மூதாட்டிகளிடம் வழிபறி செய்து வரும் திருடன் என கண்டுபிடித்தனர். சென்னை சிட்டி சென்டர், திருவள்ளூவர் சிலை அருகே இதுபோன்ற நூதன நகை திருட்டில் ஈடுபட்டுள்ளதாக ஏற்கெனவே புகார் உள்ளதாக கூறும் போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு திருடனை தேடி வருகின்றனர்.