குற்றம்

சென்னை: ஓடும் பேருந்தில் பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

kaleelrahman

மதுரவாயலில் அரசுப் பேருந்தில் பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில், நேற்று கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வேலூருக்கு அரசு பேருந்தில் தனது தாயுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது பின் சீட்டில் அமர்ந்திருந்த ராகவன் (40), என்பவர் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறியதையடுத்து வானகரம் அருகே அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டு மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த நபர் பின் சீட்டிலிருந்து பெண் வழக்கறிஞரிடம் தவறாக நடக்க முயன்றபோது அதை வீடியோவாக பதிவு செய்ததோடு, சட்டை பின்னை வைத்து அந்த நபரின் கையில் குத்தி விட்டு அதன் பின்னர் போலீசாரிடம் புகார் அளித்த காட்சிகளையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் புகார் அளித்த சிலமணி நேரத்தில் விரைந்து செயல்பட்டு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கைது செய்த போலீசாருக்கு நன்றி தெரிவித்தும் வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார். அதேசமயத்தில் அரசு விரைவுப் பேருந்துகளில் நடத்துநர் இல்லாததால் குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதாகவும் உடனடியாக அரசு விரைவுப் பேருந்துகளில் நடத்துநனர்களை நியமிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.