Accused pt desk
குற்றம்

சென்னை: வடமாநில தொழிலாளர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன்களை பறித்த 3 பேர் கைது!

வடமாநில தொழிலாளர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்த மூன்று பேரை, சிசிடிவி காட்சிகள் உதவியோடு போலீசார் கைது செய்தனர்.

webteam

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர், ஐஏஎப் சாலை, ரிக்கி கார்டன் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் தீனதயாளன் (24) என்பவர் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்.

இவர் அளித்த புகாரில், “கடந்த 16ம் தேதி இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தின் உள்ளே வந்து கத்தியைக் காட்டி மிரட்டி கட்டடத்தில் வேலை செய்து கொண்டிருந்த வடமாநில தொழிலாளிகள் வைத்திருந்த 6 செல்போன்கள் மற்றும் 13 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

CCTV footage

இதுகுறித்து தொழிலாளிகள் என்னிடம் தெரிவித்ததை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறேன். குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து, பொருட்களை மீட்டுக்கொடுக்கவும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சேலையூர் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அதில், சிசிடிவில் இருந்தது சேலையூர் பகுதியில் ஐஸ் வியாபாரம் செய்து வந்த மணிகண்டன் (33), கொத்தனார் வேலை செய்து வந்த கர்ணா (25), எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த அஜித் (எ) கீரல் (23) ஆகிய மூவர் என கண்டறியப்பட்டதாக தெரிகிறது. அதன்பேரில் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பட்டாகத்திகள் மற்றும் மூன்று செல்போன்களை பறிமுதல் செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.