சென்னையில் இருவேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்ததாக இரு கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை, கண்ணகி நகர், துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்கபடுவதாக பள்ளிகரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் கண்காணித்தனர். அப்போது கண்ணகி நகர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக இரு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த ராஜேஷ் (21), ஆந்திராவை சேர்ந்த ரவிகுமார் (20) என்பதும், இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களில் ரவிகுமார் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து கல்லூரி மாணவர்களை குறி வைத்து தன் கூட்டாளியுடன் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா, 2 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், கண்ணகி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடப்பதாக மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவரது வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். இதில், 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் ஆந்திராவை சேர்ந்த வந்தலா கிருஷ்ணா (25) என்பதும், இவர் ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இவர் மீது வழக்குப்பதிவு செய்த மணிமங்கலம் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.