சென்னையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இரட்டைக் கொள்ளையர்களில் ஒருவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த மற்றொருவரையும் கைது செய்துள்ளனர்.
சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பெரியார் நகர், 10-வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (38), இவர், தாம்பரத்தில் வருமானவரி கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த 9 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சிவகங்கைக்கு சென்றார்.
இதையடுத்து கடந்த மாதம் 12 ஆம் தேதி வீடு திரும்பிய போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 92 சவரன் தங்க நகைகள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த தாம்பரம் போலீசார், கடந்த 17 ஆம் தேதி சூர்யா என்ற நபரை கைது செய்து அவரிடமிருந்து 2 கார், மற்றும் 62 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து இவருடம் கூட்டு சேர்ந்து கொள்ளையடித்த மற்றொரு நபரை தேடிவந்தனர். இந்நிலையில் திண்டுக்கலில் இருந்த முகமது ரியாஸ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 34 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நபரை தாம்பரம் நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.