Accused pt desk
குற்றம்

செங்கல்பட்டு| போதைப் பொருட்களுடன் சிக்கிய கல்லூரி மாணவர்கள்! கஞ்சா விற்பனை செய்த ரவுடி கைது

பொத்தேரியில் கல்லூரி மாணவர்களிடம் நடத்திய சோதனையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 11-மாணவர்கள் நீதிமன்றத்திலும், 7 மாணவர்கள் காவல் நிலையத்திலும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 4 பேரை சிறையில் அடைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

webteam

செய்தியாளர்: உதயகுமார்

தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக் உத்தரவின் பேரில், தாம்பரம் மாநகர கூடுதல் ஆணையர் மகேஸ்வரி தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை அடுத்த பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கும் விடுதிகளை ஒட்டிய வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நேற்று முன் தினம் காலை 6 மணி முதல் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

போலீசார் அதிரடி சோதனை

அப்போது 18-கல்லூரி மாணவர்களை அழைத்து விசாரணை செய்ததில் அவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சா, 6-கஞ்சா சாக்லேட்கள், கஞ்சா ஆயில் உள்ளிட்ட ஏராளமான போதைப் பொருட்களை கைப்பற்றினர்.

இதையடுத்து கல்லூரி மாணவர்கள் உட்பட 21 பேரை மறைமலை நகர் போலீசார் கைது செய்தனர். அதில், ஒரு பெண் உட்பட 11 கல்லூரி மாணவர்கள், மூன்று வட மாநிலத்தவர்கள் என மொத்தம் 14 பேரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீதமுள்ள 7-பேர் காவல் நிலைய ஜாமீனில் நேற்று அனுப்பபட்டனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், போலீசார் போதிய அளவில் கஞ்சாவை கைப்பற்றாததால் ஒரு பெண் உட்பட 11 கல்லூரி மாணவர்களையும் ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும், மகேஷ்குமார் (29), சுனில்குமார் (29), டப்லு (23) ஆகிய மூன்று பேரை வரும் 13ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

court order

அதேபோல், கஞ்சா விற்பனை செய்த கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி செல்வமணி (29) என்பவரை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து இரண்டே கால் கிலோ கஞ்சா மற்றும் 4-பட்டாக் கத்திகளை பறிமுதல் செய்து செங்கல்பட்டு நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.