மோசடியில் ஈடுபட்டவர்கள் புதிய தலைமுறை
குற்றம்

சென்னை: முதியவரை குறிவைத்து FedEx கொரியர் பெயரில் மோசடி... ரூ. 4.67 கோடி மோசடி செய்த 13 பேர் கைது!

சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளரிடம் FedEx கொரியர் பெயரில் ரூ 4.67 கோடி சைபர் கிரைம் மோசடி செய்ததாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து ரூ. 53 லட்சம் பணம், செல்போன்கள், செக்புக், ஏடிஎம் கார்டுகள், பாஸ்புக், லேப்டாப் பறிமுதல்.

ஜெ.அன்பரசன்

சைபர் கிரைம் மோசடி கும்பல் தொடர்ந்து முதியவர்களை குறிவைத்து மோசடிகளை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளது. குறிப்பாக FedEx கொரியர் பெயரில் நடக்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன. இந்த மோசடி கும்பலானது குறிப்பிட்டவர்களைத் தொடர்பு கொண்டு, ‘உங்களுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தொடர்புள்ளது’ எனக்கூறி மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் நாடு முழுவதும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அதிலும் குறிப்பாக ஐ.வி.ஆர் எனப்படும் தானியங்கி செல்போன் அழைப்புகள் மூலம் முதியவர்களை குறி வைத்து இந்த மோசடி அதிகளவில் நடைபெறுகிறது. இந்த மோசடி சம்பவத்தில், மும்பை மற்றும் டெல்லி போலீஸ் அதிகாரிகள் எனக் கூறி பேசுபவர்கள், முதியவர்களை மிரட்டி அவர்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை ஏமாற்றி வருகின்றனர்.

மோசடி

இந்த கும்பலிடம் சிக்கிக்கொள்ளும் பலரில் ஒருவர்தான், சென்னை அபிராமபுரத்தை சேர்ந்த 72 வயது ஓய்வு பெற்ற பொறியாளர். இவர், 4.67 கோடி ரூபாய் பணத்தை சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இழந்துள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரும் அளித்திருக்கிறார்.

அந்தப் புகாரில் “ஓய்வு பெற்ற பொறியாளரான எனக்கு ஒரு ஃபோன் அழைப்பு வந்தது. அதில் என்னுடைய செல்போன் இணைப்பு இரண்டு மணி நேரத்தில் துண்டிக்கப்படும் என்றும் அப்படி துண்டிக்கப்படாமல் இருக்கவேண்டுமென்றால் எண் 09 அழுத்தவேண்டும் என்றும் IVR எனப்படும் பதிவு செய்யப்பட்ட குரல் கூறியது.

என்னுடைய செல்போன் எண்ணானது ஆதார், வங்கி கணக்கு, கேஸ் சிலிண்டர் இணைப்பு இன்சூரன்ஸ் போன்றவற்றிற்கு கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த எண் துண்டிக்கப்படக்கூடாது என்று எண்ணி எண் 9-ஐ அழுத்தினேன்.

குற்றவாளிகளிடம் கைப்பற்றப்பட்ட பொருட்கள்

அந்த போன் அழைப்பில் பேசிய நபர், ‘உங்கள் போன் நம்பர் மற்றும் ஆதார் எண் பயன்படுத்தி பல வங்கி கணக்குகள் திறக்கப்பட்டு, ஹவாலா பணப்பரிவர்த்தனை நடந்துள்ளன. இதனால் உங்கள் மீது மும்பை மற்றும் டெல்லி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே உங்கள் அழைப்பை நாங்கள் மும்பை போலீஸிற்கு இணைக்கின்றோம்’ என்றார்கள்.

அதன் பிறகு, எனக்கு ஒரு கால் வந்தது. அதில் மும்பை போலீஸ் என பேசிய நபர்கள், ‘உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி உங்கள் பெயரில் பல வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு, பெடெக்ஸ் கொரியர் மூலம் சட்டவிரோதமான போதை பொருட்கள், போலி பாஸ்போர்ட், 257 ஏடிஎம் கார்டு, புலி தோல் ஆகியவை அடங்கிய பார்சல் ஒன்று சுங்கதுறையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சைபர் கிரைம்

இது சம்பந்தமாக விசாரணைக்கு இரண்டு மணி நேரத்தில் மும்பை சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு நீங்கள் வரவேண்டும். இல்லையெனில் உங்களை கைது செய்வோம்’ என்று என்னை மிரட்டினார்கள்.

நான் பயந்து, ‘என்னை இந்த வழக்கிலிருந்து விடுவியுங்கள்’ என அவர்களிடம் கேட்டபோது, ‘வழக்கு விசாரணைக்கு வீடியோ கால் மூலம் ஒத்துழைத்தால் உங்களை விடுதலை செய்கிறோம்’ என்று சொல்லி, என்னை டிஜிட்டல் அரஸ்ட் என்ற அடிப்படையில் வீட்டிலேயே தனிமைபடுத்தி இருக்க சொன்னார்கள். நானும் இருந்தேன்.

அதன்பிறகு அவர்கள் ‘உங்கள் கணக்குகளில் சட்டவிரோதமான பணிபரிவர்த்தனை நடைபெற்றுள்ளதா என ஆராய வேண்டும்’ என்று கூறி, வங்கி கணக்கில் உள்ள சேமிப்பு மற்றும் வைப்புத் தொகை அனைத்தையும் அவர்கள் சொன்ன RBI வங்கிக் கணக்கிற்கு அனுப்புமாறு சொன்னார்கள்.

அத்துடன் அவர்கள் ‘30 நிமிடங்களில் உங்கள் வங்கிக்கணக்கை சரிபார்த்துவிட்டு உங்கள் பணத்தை உங்களுக்கே திருப்பி அனுப்பிவிடுவோம்’ என்று என்னை நம்பவைத்து, எனது கணக்கிலிருந்து சுமார் 4.67 கோடி ரூபாய் பணத்தை எடுத்துவிட்டார்கள்” என்றுள்ளார்.

குற்றவாளிகளிடம் கைப்பற்றப்பட்ட பொருட்கள்

30 நிமிடங்கள் ஆகியும் தன் பணம் திரும்ப வராததால், சந்தேகமடைந்த அவர் இதுகுறித்து சிலரிடம் விசாரிக்கும் பொழுது பணத்தை சைபர் கிரைம் மோசடி கும்பல் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இதையடுத்துதான் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அந்த விசாரணையில், மோசடி கும்பல் பணத்தை ஹவாலா மூலம் வெளிநாட்டிற்கு அனுப்பி, அதற்கு நிகரான அமெரிக்க டாலரை மாற்றிக்கொண்டு, பின் அதை கிரிப்டோ கரன்ஸிகளாக பெற்றுக்கொண்டு.... மாட்டிக்கொள்ளாமல் பணப்பரிவர்த்தனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இவ்வழக்கு தொடர்பாக வங்கிப் பரிவர்த்தனைகள், செல்போன் எண்கள், மெயில் ஆகியவற்றை சைபர் கிரைம் போலிசார் விசாரணை மேற்கொண்டதில், 13 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து ரூ. 53 லட்சம் பணம், செல்போன்கள், செக்புக், ஏடிஎம் கார்டுகள், பாஸ்புக் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

கைதானவர்களுடன் காவல்துறையினர்

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இக்கும்பலுக்கு வங்கிக் கணக்குகளை துவங்கி கொடுத்து கமிஷன் பெற்ற வந்தது, "Money Mule" கும்பலைச் சேர்ந்த நபர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த மணி மியுல், பலரிடம் மோசடி செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாயை சட்டவிரோதமாக மோசடி கும்பலுக்கு அனுப்பி உதவியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கைதானவர்கள் அனைவரும் விசாரணைக்குப் பிறகு சைதாப்பேட்டை 11 வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், இது சம்மந்தமாக சென்னை காவல் ஆணையர் அருண் பேசுகையில், “முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் என்று வரும் போலியான விளம்பரங்கள். முதலீட்டு செயலிகள் மற்றும் வலைதளங்கள், மோசடி ஃபோன்கால்கள் ஆகியவற்றை நம்பி அடையாளம் தெரியாத வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி ஏமாற்றம் அடைய வேண்டாம்.

சென்னை காவல் ஆணையர் அருண்

இவ்வகை குற்றங்களுக்கு உடந்தையாக, வங்கிக்கணக்குகள் துவங்கி மோசடிகாரர்களுக்கு வங்கிப்பரிவர்த்தனை செய்து கொடுப்பவர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டவர்கள் ஆவர்” என எச்சரித்துள்ளார்

மோசடி மூலமாக ஏதேனும் பணம் இழப்பு ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 மற்றும் வலைதளத்தில் https://cybercrime.gov.in-ல் தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.