குற்றம்

சிறையில் கைதிகள் பயன்படுத்திய செல்ஃபோன், ப்ளூடூத் பறிமுதல்

webteam

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் பூந்தமல்லி கிளை சிறையில் உள்ள கைதிகள் இருவரிடம் செல்ஃபோன் மற்றும் ப்ளூடூத் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை அம்பத்தூரில் இந்து முன்னனி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இவர்களை விசாரணைக்காக புழல் சிறையில் இருந்து பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்து, பின்னர் பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

இவர்கள் மட்டுமின்றி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேர், வேறு சில வழக்குகளில் தொடர்புடைய 20க்கும் மேற்பட்டோரும் அந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறை வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சிறைத்துறையினரின் அலட்சியத்தால், சிறையில் செல்ஃபோன், ப்ளூடூத், போதைப்பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக குற்றாச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து சிறைக்காவலர்கள் தனி சிறையில் சோதனை மேற்கொண்டபோது, ஒரே அறையில் தங்கி உள்ள அபுதாகிர், சமியுல்லா ஆகிய இரண்டு பேரிடம் இருந்து ஒரு செல்ஃபோன், ப்ளூடூத், செல்ஃபோன் சார்ஜர் வயர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.