குற்றம்

8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்

8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்

webteam

சேலத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதையடுத்து, விசாரணை சூடுபிடித்துள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு 8 காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் தளவாய்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கூலித்தொழிலாளி 2012 ஆம் ஆண்டு அதே பகுதியில் கங்கா என்பவரது வீட்டின் முன்பாக ரத்த காயங்களோடு சடலமாக மீட்கப்பட்டார். இதை சந்தேக மரணமாக இரும்பாலை காவல்நிலையம் வழக்குப்பதிவு செய்தது. இதனிடையே அதேபகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் வழித்தட பிரச்சனை தொடர்பான விரோதத்தால் மணிகண்டனை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தார்.

இந்த சம்பவத்தில் கூட்டாளிகள் ஏழுமலை, விஜயராஜா மற்றும் ராம்குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக கோவிந்தராஜ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கோவிந்தராஜ் மட்டும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆனால், மணிகண்டன், அளவுக்கு அதிகமான போதைப்பொருள் உட்கொண்டு மாரடைப்பால் இறந்ததாக காவல்துறையின் குற்றப்பத்திரிகையில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

மணிகண்டனின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்களும், குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்த தகவல்களும் முரண்பட்டு இருந்தன. குற்றவாளியே சரணடைந்து குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் காவல்துறையினர் அதனை மறைக்க முயற்சி செய்த விவகாரம் மணிகண்டனின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதைத்தொடர்ந்து மணிகண்டனின் மரண சம்பவம் தொடர்பான விசாரணை கடந்த ஆண்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சேலம் சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், 2 நாட்களுக்கு முன் மணிகண்டனின் உடலை தோண்டியெடுத்து தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கடந்த எட்டு ஆண்டுகளாக இரும்பாலை காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் 8 பேர் மீதும் சேலம் மாநகர காவல்துறை சார்பில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூலித் தொழிலாளி மணிகண்டன் உயிரிழந்த சம்பவத்தில் சடலத்தை தோண்டியெடுத்ததுபோல, பல்வேறு அதிர்ச்சித் தகவல்களையும் சிபிசிஐடி போலீசார் தோண்டி எடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

2012 ஆம் ஆண்டு சேலம் இரும்பாலை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய சண்முகம், தற்போது திருச்செங்கோடு காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.