குற்றம்

முறைகேடாக பத்திரப்பதிவு - சார்பதிவாளர் மீது வழக்குப்பதிவு

முறைகேடாக பத்திரப்பதிவு - சார்பதிவாளர் மீது வழக்குப்பதிவு

Sinekadhara

முறைகேடாக பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் திருத்தணி முன்னாள் சார் பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருத்தணி சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய செல்வகுமரன் என்பவர், கடந்த 2020-ம் ஆண்டு தீனதயாள் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக பதிவு செய்த விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். உறவினர்களுக்கு இடையே சொத்துகளை மாற்றம் செய்வதற்கு உரிய வழிமுறைகளை பின்பற்றவில்லை என்பது அவர் மீதான குற்றச்சாட்டாகும். இந்நிலையில் டி.டி. நாயுடுவுக்கு சொந்தமான தீனதயாள் கல்வி அறக்கட்டளையை அவரது மகன் டாட்டாஜிக்கு மாற்றம் செய்ததில் மோசடி நடைபெற்றது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் உறுதியானது.

மேலும் 115 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி செய்ததற்காக, தீனதயாள் அறக்கட்டளைக்கு சொந்தமான 104 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அந்த சொத்துகளையும் முறைகேடாக பதிவு செய்தது விசாரணையில் அம்பலமானது. இதனைத்தொடர்ந்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சார்பதிவாளர் செல்வகுமரன் மற்றும் தீனதயாள் அறக்கட்டளை நிர்வாகிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.