புதுச்சேரியில் மின் வினியோகத்தை துண்டித்த மற்றும் துணை மின் நிலையத்தில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக 10க்கும் மேற்பட்ட மின் துறை ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில் மின் துறையினை தனியார்மயமாக்கும் அரசின் முடிவை கண்டித்து மின் துறை ஊழியர்கள் இன்று 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன்காரணமாக கடந்த 4 நாட்களாக பகுதி பகுதியாக மின் வெட்டு இருந்த நிலையில், நேற்று மாலை 5 மணியில் இருந்து தொடர்ந்து 5 மணி நேரம் புதுச்சேரி முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் புதுச்சேரி முழுவதும் ஸ்தம்பித்தது.
பல்வேறு துணை மின் நிலையங்களில் உள்ள இணைப்பை அங்கு பணியில் இருந்தவர்கள் துண்டித்ததால் முழுமையாக மின் வெட்டு ஏற்பட்டது. இதை கண்டறிந்த உயரதிகாரிகள் பாதிப்பை சரி செய்து மின் விநியோகம் படிபப்டியாக சீரடைந்தாலும் புறநகர் பகுதிகளில் பாதிப்பு தொடர்ந்தபடியே இருந்தது. இதனால் பொதுமக்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மின் வெட்டுக்கான காரணம், மின்சாரத்தை துண்டித்தவர்கள் யார் யார் என்று விசாரணை செய்ய மின் துறை அமைச்சரும் உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து புதுச்சேரி துத்திப்பட்டு பகுதியில் துணை மின் நிலையத்தில் அத்து மீறி நுழைந்து மின் இணைப்பை துண்டித்து மின் விநியோகத்தை தடுத்த மின் துறை ஊழியர்கள் மீது சேதராப்பட்டு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதே போன்று புதுச்சேரி மரப்பாளம் துணை மின் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஒப்பந்த ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்து அங்கிருந்த மின் சாதன பொருட்களை சேதப்படுதியதாக சுப்ரமணி, செல்வம், செந்தில், ரவி உள்ளிட்ட பத்து மின் துறை ஊழியர்கள் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக புதுச்சேரியில் செயற்கை மின்வெட்டை ஏற்படுத்தும் மின் ஊழியர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும்ம் என்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், “மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்துவது மிகவும் தவறு. செயற்கையாக மின் வெட்டை ஏற்படுத்திய ஊழியர்கள் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும்” என்று கூறியிருந்தார்.
மேலும் புதுச்சேரியில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் துறை ஊழியர்கள் மின் தடை ஏற்ப்படுத்தி வருவதால் அனைத்து துணை மின் நிலையங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.