குற்றம்

மதுரை சிறையில் ரூ.100 கோடிக்கு ஊழல் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Sinekadhara

மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதிகள் தயாரித்தப் பொருட்கள் மூலம் நூறு கோடி அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமை மைய இயக்குநருமான பி.புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த மருத்துவப் பொருட்கள் மற்றும் எழுது பொருட்களை அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பியதாக போலி கணக்கு தயாரித்து ஊழல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2016 முதல் 2021 மார்ச் மாதம் வரை நடந்த இந்த ஊழலில் 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்ததாகவும், அதற்கு சிறைக்கைதிகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் போலி கணக்கு காண்பிக்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். குறைந்த அளவு பொருட்கள் உற்பத்தி செய்து, அதிக உற்பத்தி செய்ததுபோல் கணக்கு காண்பித்துள்ளதாகவும், இந்த முறைகேட்டில் அப்போதைய சிறை கண்காணிப்பாளர், டிஐஜிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை செயலாளர், சிறைத்துறை டிஜிபி ஆகியோருக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.