ஆவடி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்து கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆவடியை அடுத்த வெள்ளானூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு நேற்று மாலை ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, எஸ்.ஐ விமலநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக செடிகளை வைத்து கொண்டு வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். இதனையடுத்து, போலீசார் அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, அவரது பாக்கெட்டில் ஒரு கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர், அவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும், அவர் வைத்திருந்த செடி, கஞ்சா செடிகள் என்பதை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, போலீசார் அவரிடம் கஞ்சா செடிகள் வளர்க்கும் இடத்தை காட்டுமாறு கூறியுள்ளனர். பின்னர், போலீசார் அவர் கூறிய கோவில்பதாகை ஏரிக்கரை ஓரமாக வளர்த்து வந்த அரை கிலோ கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர், போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர் வெள்ளானூர், 4வது தெருவைச் சார்ந்த மணிகண்டன் (26) என்பது தெரியவந்தது. இதற்கிடையில், பறிமுதல் செய்த செடிகளின் மாதிரியை சோதனை செய்ய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் நடராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். பின்னர், அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.