குற்றம்

170 சவரன் நகை திருட்டுக்குபின் கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்... பணத்துக்காகவா, முன்பகையா?

170 சவரன் நகை திருட்டுக்குபின் கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்... பணத்துக்காகவா, முன்பகையா?

நிவேதா ஜெகராஜா

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே ஆவுடையார்பட்டிணத்தில் தொழில் அதிபர் முஹமது நிஜாம் என்பவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கின் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைத்துள்ள போலீசார் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சைஆகிய மாவட்டங்களுக்கும் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மணமேல்குடி காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொழில் முனைவோர் யாரேனும்கூட தொழில் போட்டி காரணமாக இந்த கொலை சம்பவத்தை திட்டமிட்டு நடத்தியிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியையடுத்த மணமேல்குடி அருகே உள்ள ஆவுடையார்பட்டிணம் கடற்கரை ஓரம் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும் வணிக நிறுவனங்கள், மளிகைக் கடைகள், கண் கண்ணாடி கடைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் பல ஆண்டு காலமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்தவர் தான் நிஜாம் (வயது 58). ஆரம்ப காலகட்டத்தில் வெளிநாட்டில் வசித்து வந்த இவர், அதன்பின் திருவாரூரில் கண் கண்ணாடி கடை நடத்தி வந்துள்ளார். தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் ஆவுடையார்பட்டிணம் கிராமத்திலேயே தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆயிஷா பீவி என்ற மனைவியும் ராஜாமுகமது, ஷேக் அப்துல் காதர் என்ற 2 மகன்களும் பர்கானா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

இவர்களில் மகன்கள் இருவரும் பரமக்குடியில் ஆப்டிகல் ஷோரூமை நடத்தி வருவதால் அங்கேயே தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் ஆவுடையார்பட்டினத்தில் உள்ள நிஜாம் இல்லத்தில் நிஜாமும் அவரது மனைவி ஆயிஷா பீவியும் நேற்று இரவு நோன்பு நோற்பதற்காக அருகே உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீடுதிரும்பியுள்ளனர். அப்போது நிஜாம், வீட்டு வாசலில் உள்ள வராண்டாவில் அமர்ந்து 11 மணிக்கு மேல் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்ததாகவும் அவரது மனைவி ஆயிஷாபீவி வீட்டிற்குள் சமையல் வேலையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்போது அவரது வீட்டின் பின்புற சுற்று சுவரில் ஏறி குதித்து வந்து பதுங்கி இருந்த 3 மர்ம நபர்கள் நிஜாமை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். பின்னர் வீட்டிற்குள் நுழைந்து அவரது மனைவி ஆயிஷாபீவியை கட்டிப் போட்டுவிட்டு கத்தியை காட்டி மிரட்டி நகைகள் பாதுகாப்பு பெட்டகத்தில் சாவியை பெற்று அதில் இருந்த சுமார் 170 சவரன் நகையை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

ஆயிஷாபீவி கட்டப்பட்டிருந்த நிலையில் மெல்ல மெல்ல சென்று மொபைல் போனை எடுத்து அதன் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அவரது உறவினர்கள் முகமதுநிஜாம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதையும் ஆயிஷா பீவி கட்டப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மணமேல்குடி காவல்துறையினர் நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் குற்றச் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு மேற்கொண்டு விசாரணையை முடுக்கிவிட்டார். பின்னர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் கொலையாகி கிடந்த முகமது நிஜாமின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் பின்னர் சம்பவ இடத்தில் திருச்சி சரக ஐஜி பாலகிருஷ்ணன், டிஐஜி சரவண சுந்தர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க ஏடிஎஸ்பிக்கள் ஜெரீனாபேகம் மற்றும் கீதா தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நிஜாம் கொலை நகைக்காக அரங்கேறியதா அல்லது அவரது ரியல் எஸ்டேட் தொழிலில் முன்விரோதம் காரணமாக அவரை கொலை செய்துவிட்டு நகைக்காக நடந்த கொலை போல் மாற்ற திட்டம் தீட்டி இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி தனிப்படை போலீசார் அருகே உள்ள மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விரைந்து குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் நிஜாம் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவி ஆயிஷா பீபி அளித்துள்ள புகாரின் அடிப்படையில் மணமேல்குடி காவல் நிலையத்தில் ஐந்து (449,342,397,456,302) பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் கூறுகையில், “எங்கள் கிராமத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் இதற்கு முன்பு நடந்தது இல்லை. இதுபோன்ற ஒரு துணிகர கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது எங்கள் பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக தமிழக அரசும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து இந்த கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து அவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்க வேண்டும். மேலும் இனிமேல் இதுபோல் ஒரு சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.