குற்றம்

”பணமில்லையெனில் வீட்டை பூட்டி வைக்கவேண்டாம்”- கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்ற கொள்ளையர்கள்

”பணமில்லையெனில் வீட்டை பூட்டி வைக்கவேண்டாம்”- கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்ற கொள்ளையர்கள்

நிவேதா ஜெகராஜா

மத்திய பிரதேசத்தில் வீட்டில் கொள்ளையடிக்க வந்த சிலர், வீட்டில் பணம் பொருள் என எதுவும் பெரிய அளவில் இல்லாததை கண்டு ‘இந்த வீட்டையெல்லாம் ஏன் பூட்டிவைத்துள்ளீர்கள்?’ என உரிமையாளருக்கு கோபமாக கடிதம் எழுதிவைத்துவிட்டு தப்பித்துள்ளனர்.

மத்திய பிரதேசம் தேவாஸ் என்ற மாவட்டத்திலுள்ள அரசு அதிகாரியொருவரின் வீட்டுக்கு வந்த கொள்ளையர்கள், அங்கு பெரிய அளவிலான பணமோ விலைமதிப்புமிக்க பொருளோ எதுவும் இல்லாததால் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள். இவர்கள் கொள்ளையடிக்க சென்ற வீட்டின் உரிமையாளரான திரிலோச்சின் சிங், சமீபத்தில்தான் அம்மாவட்டத்தில் உள்ள கதேகான் நகரில் துணை-பிரிவு மாஜிஸ்திரேட் (SDM) ஆக பொறுப்பேற்றிருந்தார். முன்னதாக இவர் துணை மாவட்ட ஆட்சியராக இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கொள்ளையர்களில் ஒருவர், “கலெக்டர் அவர்களே, பணமில்லையென்றால் வீட்டை பூட்டி வைக்கவேண்டாம்” என எழுதிவிட்டு சென்றுள்ளார். 

என்னதான் வீட்டில் பணமில்லை என எழுதிவைத்துவிட்டு கொள்ளையர்கள் சென்றிருந்தாலும், அங்கிருந்த ரூ. 30,000 பணமும், சில நகைகளும் திருடப்பட்டுள்ளன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர், கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கொள்ளையர்களின் கடிதத்தை செய்தியாளர் சமூகவலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, அது வைரலாகி வருகிறது.