கள்ளக்குறிச்சி அருகே பூனைக்கு பால் கொடுத்து அன்பு காட்டும் நாயை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் விளாந்தாங்கல் ரோட்டில் இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடை நடத்தி வருபவர் மணிகண்டன். இவர் நாய், பூனை என விலங்குகள் மீது அதிக ஆர்வம் உடையவர். இந்நிலையில் இவர் வளர்த்து வரும் நாய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடிபட்டு கால் முறிந்த நிலையில் அதற்கு மருத்துவ சிகிச்சை அளித்து பாதுகாத்து வளர்த்து வருகின்றார்.
இந்நிலையில் அவர் வளர்த்துவரும் பூனைகள் பால் இல்லாமல் தவித்து வந்தன. இதைக்கண்ட நாய், பூனைக் குட்டிகளுக்கு பாசத்துடன் பால் தந்து வருகின்றது. கள்ளக்குறிச்சியில் பூனைக்கு பால் கொடுத்து அன்பு காட்டும் நாய், இனம் கடந்த தாய் பாசத்தை வெளிப்படுத்தி வருவதை ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனமும் மக்கள் பார்த்து வருகின்றனர்.
பொதுவாக வீட்டில் சகோதரர்களிடையே சண்டை ஏற்படும்போது ஏன் நாயும் பூனையும்போல சண்டை போடுறீங்க என்று பெற்றோர் திட்டுவார்கள். அந்த அளவிற்கு நாய்க்கும் பூனைக்கும் ஆகாது. ஆனால் இதை பொய்யாக்கும் விதமாக நாயும் பூனையும் ஒன்றோடு ஒன்று பழகுவதோடு மட்டுமல்லாமல், இனம் கடந்து பால் தரும் அளவிற்கு பாசத்துடன் உள்ளது.
பூனைகள் நாய் மீது படுத்து உருண்டு விளையாடுவதோடு அதனிடம் பால் குடித்து வளர்கின்றன. நாயும் தனது பிள்ளையைபோல் பூனையை பாதுகாத்து வளர்த்து வருகின்றது. இந்த அபூர்வ நிகழ்வை பார்ப்பதற்காகவே இருசக்கர வாகன ஓட்டிகளும் அருகிலுள்ள சுற்றத்தாரும் அடிக்கடி அவரின் கடைக்கு வந்து செல்கிறார்கள்.