குற்றம்

சாலையில் வீசப்பட்ட ரூ.1.5 கோடி கொள்ளையடிக்கப்பட்ட பணம்!

சாலையில் வீசப்பட்ட ரூ.1.5 கோடி கொள்ளையடிக்கப்பட்ட பணம்!

webteam

சென்னை கோட்டூர்புரத்தில் சாலையில் வீசப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் நந்தனத்திலுள்ள கட்டுமான நிறுவன உரிமையாளர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோட்டூர்புரம் உதவி ஆய்வாளர் ராமு‌ மற்றும் காவலர்கள் சக்திவேல், அண்ணாசாமி ஆகியோர் வழக்கம் போல் காவல்துறை வாக‌னத்தில் ரோந்து சென்றுள்ள‌‌னர்‌. அப்போது வரதாபுரம் ஏரிக்கரை அருகே இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்றுள்ளார். அவர் மீது சந்தேகம் ஏற்படவே காவல்துறையினர் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

அப்போது தன்னிடமிருந்த 3 பைகளை சாலையில் வீசிய அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார். பை‌களை சோதித்த போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள் 3 பைகளில் இருந்த ஒரு கோடியே 56 ‌லட்‌சத்து 61 ஆயிரத்து 560 ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

பணத்தை வீசிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே சென்னை நந்தனத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவன உரிமையாளர் பாலசுப்பிரமணியன் என்பவர் வீட்டில் ஒரு கோடியே 6‌0 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது. இதனையடுத்து தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணமே சாலையில் வீசப்பட்டதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

தொழிலதிபர் வீட்டில் ஒரு‌ கோடியே 75 லட்சம் ரூபாய் இருந்த நிலையில், ஒரு கோடியே 60 லட்சம் மட்டுமே கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. பணத்துடன் இருந்த 30 சவரன் நகை திருடு போகவில்லை. எனவே பாலசுப்பிரமணியனுக்கு தெரிந்த நபர்களே கொள்ளை அடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.  

கொள்ளைப் போன வீட்டில் சிசிடிவி கேமரா இல்லாததால் கொள்ளையர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சாலையில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் பதிவுகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.