சென்னையில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை தரமணி, எம்.ஜி.சாலையில் வசிக்கும் கரீம் (52) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை கடந்த 3ஆம் தேதி இரவு வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். காலை எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து கரீம் தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருசக்கர வாகனம் திருடு போவது தொடர்கதையாகி வந்த நிலையில், புகாரின் பேரில் தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் குற்றப்பிரிவு ஆய்வாளர் சாலைராம் சக்திவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையை துவங்கினர்.
தனிப்படை போலீசார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, இருசக்கர வாகனத்தை திருடிய தரமணியை சேர்ந்த ரீகன்(20) என்பவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அப்பகுதியில் நான்கு இருசக்கர வாகனத்தை திருடியதும், அவரது நண்பர்களான பெருங்குடியை சேர்ந்த அசார் மொய்தீன் (23), வினோத் (19), ரமேஷ் (23), திருமுல்லைவாயிலை சேர்ந்த வெங்கடேஷ் (23), ஊரப்பாக்கத்தை சேர்ந்த இன்பதமிழன் (21) ஆகிய 5 பேரும் திருட்டுக்கு உதவியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 6 பேர் மீதும் திருட்டு வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நான்கு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.