சுசனா சேத் twitter
குற்றம்

மகனைக் கொலை செய்ததாக பெண் சி.இ.ஓ. கைது.. மருத்துவ அறிக்கை, விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!

கோவாவில் ஹோட்டல் ஒன்றில் 4 வயது குழந்தை ஒன்றை, பெற்ற தாயே கொலை செய்திருப்பதுதான் தற்போதைய பேசுபொருளாக உள்ளது. இதுதொடர்பாக தற்போதைய நிகழ்வுகள் என்னவென்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

Prakash J

பெங்களூருவில் இயங்கிவரும் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் சிஇஓவாக இருப்பவர் சுசனா சேத். இவர் கடந்த ஜன.6ஆம் தேதி, அன்று வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள சோல் பன்யன் கிராண்டே என்ற ஹோட்டலுக்கு தனது நான்கு வயது மகனுடன் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அங்கிருந்து பெங்களூரு திரும்பியசமயத்தில், தனது மகனைக் கொலைசெய்து பெரிய பேக் ஒன்றில் கொண்டுசென்றபோது சிக்கிக்கொண்டார்.

கொலைதொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள அவரை ஆறு நாள் போலீஸ் காவலில்வைக்க கோவா நீதிமன்றம் உத்தரவிட்டது. பெற்ற மகனை கொலைசெய்த பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் திருமண வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரிவால் இந்தக் கொலையை சுசனா செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது, வெங்கட்ரமணா ஞாயிறன்று செல்போனில் வீடியோ கால் மூலம் குழந்தையுடன் பேசிவந்துள்ளார். ஆனால் இதனை சுசானா சேத் விரும்பவில்லை என கூறப்படுகிது. இதனால் குழந்தையை சுசனா சேத் கோவா ஹோட்டலில் வைத்து கொலை செய்து இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதன் விசாரணையின்போது சுசனா சேத், போலீசாரிடம் ‘தனது குழந்தையைக் கொல்லவில்லை’ எனத் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அவர் போலீசாரிடம், ‘குழந்தைமீது தாம் அதிக பாசம் வைத்திருந்தேன். தாம் அதைக் கொல்லவில்லை. ஹோட்டல் அறையில் குழந்தை தூங்கியபோது அப்படியே இறந்துவிட்டது. குழந்தை இறந்த துக்கத்தில் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதில்தான் ஹோட்டல் அறையில் ரத்தக்கறை படிந்துள்ளது’ என போலீசாரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது..

ஆனால் குழந்தையின் பிரதேப் பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் உடலில் காயம் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதோடு குழந்தை தலையணை அல்லது வேறு பொருளால் முகத்தை அழுத்திக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுசனாவே குழந்தையைக் கொன்றிருக்கலாம் என போலீசார் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திவரும் போலீசார், “சுசனா சேத் தங்கியிருந்த அறைக்கு வேறு யாரும் செல்லவில்லை. குழந்தை முழுக்க முழுக்க சுசானா சேத் கட்டுப்பாட்டில்தான் இருந்துள்ளது. தவிர, அந்த ஹோட்டல் அறையில் சோதனையின்போது இருமல் மருந்தின் வெற்றுப் பாட்டில் கண்டெடுக்கப்பட்டுது. அந்த மருந்தைக்கூட, தனக்கு இருமல் இருப்பதாக ஹோட்டல் ஊழியரிடம் சொல்லி சுசனா வாங்கிவரச் சொல்லியிருக்கிறார். ஆக, அதன்மூலம் குழந்தைக்கு அவர் அதிக அளவு மருந்தைக் கொடுத்திருக்கலாம். அதில் அந்தக் குழந்தை மூச்சுத் திணறி இறந்திருக்கலாம். மேலும், பிரதேப் பரிசோதனை அறிக்கையிலும் அழுத்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கிறது. இதனால் சுசனாவே திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்திருக்கலாம்” என்கின்றனர்.

பிரேதப் பரிசோதனை குறித்து மருத்துவர் குமார் நாயக், ”குழந்தையை கைகளால் நெரித்ததாக காயம் எதுவுமில்லை. தலையணை அல்லது வேறு பொருட்களைக் கொண்டு அழுத்தப்பட்டதாகவே தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஜகார்த்தாவில் இருந்து இந்தியா திரும்பிய சுசனா சேத்தின் கணவர் வெங்கட்ராமன், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மகனின் உடலை வாங்கிச் சென்றார்.