சுசனா சேத் ட்விட்டர்
குற்றம்

குறுஞ்செய்தியால் காத்திருந்த கணவர்: அவசரமாக காலிசெய்த ரூம்.. மகனை கொலைசெய்த சிஇஓ வழக்கில் புதுதகவல்

மகனைக் கொலை செய்த பெண் சி.இ.ஓ. வழக்கு விசாரணையில், போலீசாருக்குப் புதிய தகவல் கிடைத்துள்ளது.

Prakash J

பெங்களூருவில் இயங்கிவரும் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் சிஇஓவாக இருப்பவர் சுsசனா சேத். இவர் கடந்த ஜன.6ஆம் தேதி, அன்று வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள சோல் பன்யன் கிராண்டே என்ற ஹோட்டலுக்கு தனது நான்கு வயது மகனுடன் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அங்கிருந்து பெங்களூரு திரும்பியசமயத்தில், தனது மகனைக் கொலைசெய்து பெரிய பேக் ஒன்றில் கொண்டுசென்றபோது சிக்கிக்கொண்டார்.

கொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள அவரை ஆறு நாள் போலீஸ் காவலில் வைக்க கோவா நீதிமன்றம் உத்தரவிட்டது. பெற்ற மகனை கொலைசெய்த பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில், கோவாவுக்குச் சென்றிருந்த சுச்சனா சேத், அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையை ஜனவரி 6 - 10 வரை என 5 நாட்களுக்கு முன்பதிவு செய்திருந்ததாகவும், ஆனால், அதற்கு முன்பே அவர் அறையை காலிசெய்ததாகவும் தற்போதைய விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் விசாரணைப்படி, சுச்சனா சேத், கடந்த ஜனவரி 7 அன்று இரவு 9.30 மணியளவில், ஹோட்டல் ஊழியர்களிடம் ’பெங்களூருவில் தனக்கு அவசர வேலை இருக்கிறது. ஆகையால் அறையை உடனே காலிசெய்ய வேண்டும்’ எனக் கூறியதாகத் தெரிய வந்துள்ளது. அதன்பிறகே, அவர் காருக்கு ஏற்பாடு செய்துவிட்டு நள்ளிரவு 12.30 மணியளவில் கோவா ஹோட்டல் அறையிலிருந்து வெளியேறி உள்ளார் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே அவரது கணவர் வெங்கட்ரமணாவுக்கும் குறுஞ்செய்தி ஒன்றை சுசனா அனுப்பியதாகவும், அதில், ’ஜனவரி 7, ஞாயிறன்று பெங்களூருவில் மகனைச் சந்திக்கலாம்’ எனத் தெரிவித்திருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், சுச்சனா சேத் சொன்ன நாளில் கணவர் வெங்கட் ரமணா பெங்களூருவுக்கு வந்து கிட்டத்தட்ட 2 மணி நேரம் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து சுச்சனாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வெங்கட் ரமணா பதில் கேட்டதாகவும், அதற்கு அவர் எந்தப் பதில் அளிக்காததாலேயே கணவர் ஏமாற்றுத்துடன் மீண்டும் ஜகார்த்தாவுக்குப் புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: தமிழ்நாடு To கர்நாடகா: அலங்கார ஊர்தி சர்ச்சைகள்! அரசியலான கதையில் புதிய திருப்பம்-தீர்வு கிடைக்குமா?