திருமணநாள், பிறந்தநாள் போன்ற விசேஷ நாட்களில் மனைவிமார்கள் தங்களின் கணவரிடம் இருந்து பரிசு எதிர்பார்ப்பதும், அதேபோல கணவன் தனது மனைவியிடமிருந்து பரிசு எதிர்பார்ப்பதும் வழக்கமான ஒன்றுதான். அந்தப் பரிசில் அவர்களின் அன்பு பரிமாறப்படுவதாக நம்பப்படுகிறது. இது போன்ற தினங்களை குறிப்பாக ஆண்கள் மறந்துவிட்டால் அவர்களின் நிலை பரிதாபத்திற்குறியதாக மாறிவிடும்.
பெங்களுரில் அப்படிப்பட்ட ஒரு பரிதாப நிகழ்வு நடந்துள்ளது. அதன்படி கணவர் திருமணநாளை மறந்ததால் கோபம் கொண்ட மனைவி, கணவரை கத்தியால் குத்தியிருக்கிறார். என்ன நடந்தது? பார்க்கலாம்...
பெங்களூரை சேர்ந்தவர் 37 வயதான கிரண். இவர் மனைவி சந்தியா. கிரண் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் தவறாமல் கிரண் தனது திருமணநாளுக்கு தன் மனைவிக்கு ஏதாவது ஒரு பரிசுபொருள் வாங்கி கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் இந்த தம்பதிக்கு திருமணநாள் வந்துள்ளது. எப்போதும்போல கணவன் தனக்கு பரிசு பொருள் வாங்கி தருவார் என்று எதிர்பார்த்து காத்து இருந்திருக்கிறார் சந்தியா. ஆனால் கிரண் பரிசு ஏதும் வாங்கி த்தரவில்லை. சரி திருமணநாள் அன்று சஸ்பென்சாக நமக்கு பரிசை தருவார் என்று நினைத்து இருந்திருக்கிறார் சந்தியா. ஆனால் திருமணநாள் முடியும்வரையிலும் கிரண் சந்தியாவுக்கு பரிசு ஏதும் தரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த சந்தியா, சமையலறையிலிருந்த கத்தியை எடுத்துக்கொண்டு, தூங்கிக்கொண்டிருந்த தன் கணவனை தாக்கியிருக்கிறார். அப்போது சந்தியாவை தடுத்திருக்கிறார் கிரண். இவர்களின் குரல் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து கிரணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் கிரணின் காயத்திற்கு மருந்து போட்டதுடன் காவல்துறைக்கு தகவலளித்தும் உள்ளனர்.
மருத்துவமனைக்கு வந்த போலிசார், சந்தியாமீது கொலை முயற்சி வழக்கை பதிவு செய்து தம்பதியரிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதில் கிரண், தனது தாத்தா கடந்த சில நாட்களுக்கு முன் இறந்ததனால், தான் மனவருத்தத்தில் இருந்ததாகவும் அதனால் சந்தியாவிற்கு பரிசு வாங்கி தரவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சமீபகாலமாக தனது மனைவி சந்தியா மன உளைச்சலில் இருப்பதால் அவருக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை தேவைப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.