பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 85 வயது மூதாட்டியின் தங்கச்சங்கிலி மற்றும் மொபைல் போனை மருத்துவமனை ஊழியர்கள் திருடிவிட்டனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பனஸ்வாடி பகுதியை சேர்ந்த எம்.ஜகந்நாதா (63) என்பவரின் தாயார் பவானி (83). உடல்நலப் பிரச்னைகள் மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக மே 11 அன்று கம்மனஹள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி மே 19 அன்று மரணமடைந்தார். ஆனால், அதிர்ச்சியூட்டும் விதமாக அவரது மொபைல் போன் மற்றும் தங்கச் சங்கிலி உள்ளிட்ட அவரது உடமைகள் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.
"நான் வீடியோ அழைப்புகள் மூலம் என் அம்மாவுடன் தொடர்பில் இருந்தேன். மே 16 அன்று அவரது சங்கிலி காணவில்லை என்பதை நான் கவனித்தேன். அவர் சிகிச்சைக்காக ஐ.சி.யுவில் இருந்ததால் அவரது சங்கிலி அகற்றப்பட்டது என்று நினைத்தேன். கோவிட் காரணமாக என் அம்மா உயிரிழந்த பின்பு ரூ .50,000 மதிப்புள்ள எனது தாயின் தங்கச் சங்கிலியையும் அவரது மொபைல் போனையும் என்னிடம் ஒப்படைக்கவில்லை. மருத்துவமனை ஊழியர்கள் அவற்றைத் திருடிவிட்டனர் ”என்று ஜகந்நாதா தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜெகந்நாதா பனஸ்வாடி போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.