குற்றம்

கவரிங் நகைகளுக்கு 101 முறை வங்கிக் கடன்... போலீசாரையே அதிர வைக்கும் மெகா மோசடியின் பின்னணி

கவரிங் நகைகளுக்கு 101 முறை வங்கிக் கடன்... போலீசாரையே அதிர வைக்கும் மெகா மோசடியின் பின்னணி

Sinekadhara



சிண்டிகேட் வங்கியில் கவரிங் நகைகளை வைத்து கடன் திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 2 லட்ச ரூபாய் நூதன முறையில் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை கூட்டாளியுடன் போலீசார் கைது செய்தனர்.

சென்னை நந்தனம் அண்ணா சாலையில் இருக்கும் சிண்டிகேட் வங்கி தற்போது கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முரளி என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் தங்க நகைக்கடன் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்துள்ளார். அதில் 101 முறை போலி நகைகளுக்கு, அதாவது கவரிங் நகைகளுக்கு ஒரு கோடியே 2 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கியிருப்பது விசாரணையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நகை மதிப்பீட்டாளர் முரளியை சந்திக்க போலி நகையுடன் வந்த நபரை எதேச்சையாக விசாரித்த வங்கி மேலாளர் பிரவீன் குமார், ஆவணங்கள் போலியாக இருந்ததால் அது குறித்து கேட்டுள்ளார். ஆனால் வந்த நபர் அங்கிருந்து தப்பித்து ஓடியதும் சந்தேகமடைந்த பிரவீன்குமார், நகை மதிப்பீட்டாளர் முரளி பொறுப்பில் இருந்த நகைகளை சரிபார்த்த போதுதான் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

மேலும் இந்த மோசடி கடந்த 4 ஆண்டுகளாக நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முரளி மூளையாக செயல்பட்டதைக் கண்டுபிடித்த பிரவீன்குமார், இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி தடுப்பு பிரிவில் புகார் அளித்தார்.

போலீஸ் விசாரணையில், நகை மதிப்பீட்டாளரான முரளி, தங்க நகைக்கடன்பெறும் வாடிக்கையாளர்களாக தனது நண்பர்கள், உறவினர்களை ஈடுபடுத்தியுள்ளார். அவர்களிடம் கவரிங் நகைகளை கொடுத்து வாடிக்கையாளர் போல் வங்கிக்கு வரவழைத்து அவற்றை தங்க நகைகளை மதிப்பீடு செய்யும் முரளி, நகைகள் வங்கி லாக்கரில் வைத்துவிடுவார். அதற்கான கடன் பணத்தில் வாடிக்கையாளர்கள் போல் வரும் தனது நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு கமிஷன் வழங்கிவிட்டு, மற்ற பணத்தைத் தானே வைத்துக்கொள்வார். இதேபோல் 101 முறை போலி கணக்குகளை தொடங்கி, தங்க நகைக்கடன் மூலம் ஒரு கோடியே 2 லட்சத்து 32 ஆயிரம் பணத்தை மோசடி செய்து திருடியிருப்பது தெரியவந்துள்ளது.

 இந்த வழக்கில் போலீஸ்காரரின் மனைவியான சாந்தியையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். வங்கிக்கு அடிக்கடி வந்து செல்லும் போது, நகை மதிப்பீட்டாளர் முரளிக்கும் சாந்திக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிறகு மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார்.

இந்த வழக்கில் நகை மதிப்பீட்டாளர் முரளி, உடந்தையாக இருந்த சாந்தி ஆகிய இருவரையும் கைது செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த மோசடியில் நகை மதிப்பீட்டாளர் முரளிக்கு உடந்தையாக இருந்து உதவி செய்தவர்கள் யார்- யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.