குற்றம்

கஞ்சா சப்ளே செய்தவர்களின் வங்கி கணக்கு முடக்கம்! - டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி

கஞ்சா சப்ளே செய்தவர்களின் வங்கி கணக்கு முடக்கம்! - டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி

Abinaya

ஆபரேஷன் கஞ்சா' வேட்டையில் தமிழகம் முழுவதும் இதுவரை கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகத் தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் சென்னையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் பேசிய முதல்வர், 'கஞ்சா விற்பனை தமிழகத்தில் ஒழிக்கப்படவில்லை என்றால் அதிகாரிகளுக்கு எதிராகத் தான் சர்வதிகாரியாக மாறுவேன்' என முதல்வர் எச்சரித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் போதைப் பொருட்கள் தடுப்பு பணி தீவிரமாக நடைபெற்றது. இது தொடர்பாக தற்போது தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தமிழ்நாடு முழுவதும் இதுவரை “ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0” நடவடிக்கையின் கீழ் கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கிக் கணக்குகளில் உள்ள சுமார் ₹50 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 460 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு, 1,006 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையாளர்களும், கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும், சட்ட விரோதமாக வாங்கிக் குவித்த சொத்துக்களையும் முடக்கிச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் கஞ்சா கடத்துவோர் மற்றும் பதுக்குவோர், விற்பனை செய்வோர் இந்த குற்றத்தின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும்” என்று டிஜிபி லைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.