குற்றம்

சமரசம் ஏற்பட்டுவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தகவல்... மருத்துவர் சுப்பையாவுக்கு ஜாமீன்

சமரசம் ஏற்பட்டுவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தகவல்... மருத்துவர் சுப்பையாவுக்கு ஜாமீன்

நிவேதா ஜெகராஜா

பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர்  சுப்பையாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏபிவிபி மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவரான மருத்துவர் சுப்பையா சண்முகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாகன நிறுத்த தகராறில், அதே குடியிருப்பில் இருந்த பெண்ணொருவரின் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்தும், பயன்படுத்திய முகக்கவசத்தை வீசியும் இடையூறு செய்ததாக வீடியோ வெளியானது. இந்த விவகாரத்தில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் அந்த பெண்மணியின் உறவினர் அளித்த புகாரில், இந்திய தண்டனை சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியது சட்ட பிரிவுகள் சேர்க்கபட்டது. இந்த வழக்கில் மார்ச் 19ம் தேதி மருத்துவர் சுப்பையா கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பின் ஜாமீன் கோரி மருத்துவர் சுப்பையா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் மார்ச் 21ம் தேதி வரை மருத்துவர் சுப்பையாவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணக்கு வந்தது. அப்போது மருத்துவர் சுப்பையா தரப்பில், புகாரளித்த பெண்மணியே புகாரை திரும்பப் பெறுவதாக கூறிய நிலையில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கைது செய்யப்பட்டதாகவும், சிறுநீர் கழித்ததாக கூறப்படும் காட்சி சித்தரிக்கப்பட்டது எனவும் வாதிடப்பட்டது.

முன்னதாக இந்த விவகாரத்தில் கடந்த முறை நடந்த விசாரணையின்போது `இவ்விஷயத்தில் சமரசம் ஏற்பட்டுவிட்டது. வழக்கை மேற்கொண்டு நடத்த தேவையில்லை’ என்று பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் `அந்தப் பெண் காவல்துறையால் மிரட்டப்பட்டுளார்’ என்று புகார் அளித்த அப்பெண்ணின் உறவினர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இந்த முரண்களை தொடர்ந்து, `இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்திற்கு மருத்துவர் சுப்பையா-வை தற்போது கைது செய்தது ஏன்? விடுமுறை தினத்தன்று கைது நடவடிக்கை மேற்கொண்டது ஏன்?’ என காவல்துறைக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். 
இதற்கு இன்று பதிலளித்த காவல்துறை தரப்பு, “இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே சுப்பையா மீது வழக்கு பதியப்பட்டது. கடந்த மார்ச் 6ஆம் தேதிதான் சாட்சியம் பதிவுசெய்யப்பட்டதால், அதன்பின்னர் கைது செய்யப்பட்டது. மற்றபடி காவல்துறையினர், விடுமுறை நாள் என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பதில்லை” எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, மருத்துவர் சுப்பையாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் விசாரணைக்கு தேவைப்படும்போதெல்லாம் விசாரணை அதிகாரி முன்பு மருத்துவர் சுப்பையா ஆஜராக வேண்டுமென தனது உத்தரவில் நிபந்தனை விதித்துள்ளார்.