குற்றம்

ஆவடி: மூதாட்டியிடம் நகை பறிப்பு: சிசிடிவி காட்சியால் சிக்கிய மருமகள்

ஆவடி: மூதாட்டியிடம் நகை பறிப்பு: சிசிடிவி காட்சியால் சிக்கிய மருமகள்

kaleelrahman

ஆண் நண்பருடன் சேர்ந்து மாமியாரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மருமகளை சிசிடிவி உதவியோடு இரண்டே மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

ஆவடியை அடுத்துள்ள அண்ணனூர், தேவி நகர், சிவகாமி தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார் (35). இவரது மனைவி லதா என்ற மோகனசுந்தரி (30).இவர்களுடன் வினோத் குமாரின் தாயார் லலிதா (60) வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று வினோத்குமார் வேலைக்கு சென்றுவிட்ட பிறகு, லதாவும் வீட்டிலிருந்து மளிகை கடைக்குச் சென்று விட்ட நிலையில், லலிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது, சுமார் 30வயது மதிக்கத்தக்க இளஞைர் ஒருவர் வீட்டுக்குள் வந்து லலிதாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து மருமகள் லதா ஒன்றும் தெரியாததுபோல் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் லதா, இளைஞர் ஒருவரை மொபட்டில் அழைத்து வந்து வீட்டின் அருகே  சாலையில் இறக்கி விட்டுச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து, போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் லதாவை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் லதாவின் தங்கையின் மருத்துவச் செலவுக்கு பணம் தேவைபட்டது. இதனையடுத்து, லதா மாமியார் லலிதாவிடம் இருந்து நகைகளை வாங்கி அடகு வைத்து மருத்துவச் செலவுக்கு பணம் கொடுத்துள்ளார். இதன் பிறகு, லலிதா நகைகளை உடனடியாக மீட்டுத் தருமாறு லதாவுக்கு டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனையடுத்து, லதாவும் பணத்தை புரட்டி அடகு கடையில் இருந்து நகையை மீட்டு லலிதாவிடம் கொடுத்துள்ளார்.

இதன் பிறகு, மாமியார் லலிதா மீது மருமகள் லதாவுக்கு ஆத்திரம் இருந்துள்ளது. மேலும், அவரை பழிவாங்க வேண்டும் என லதா திட்டம் தீட்டியுள்ளார். இதனையடுத்து, ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த தனது பள்ளித்தோழரான கார்த்திகேயன் (32) என்பவரின் உதவியை நாடியுள்ளார். பின்னர், அவர் கார்த்திகேயனிடம் மாமியார் அணிந்திருந்த நகையை பறித்து என்னிடம் தருமாறு கூறியுள்ளார். இதற்கு கார்த்திகேயனும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று லதா கார்த்திகேயனை மொபட்டில் அழைத்துக் கொண்டு வீட்டு அருகில் விட்டு விட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு, கார்த்திகேயன் வீட்டுக்குள் சென்று லலிதாவிடம் இருந்து 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளார். அதன் பிறகு, அந்த தங்கச் சங்கிலியை லதாவிடம் கொடுத்து விட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து லதாவை இரண்டு மணி நேரத்தில் கைது செய்த போலீசார், 3 சவரன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள லதாவின் பள்ளி தோழரான கார்த்திகேயனை போலீசார் தேடி வருகின்றனர்.