சென்னை புரசைவாக்கத்தில் தனது ஆட்டோவில் பயணித்த பெண்ணின் பையை பறித்துக் கொண்டு தப்பியோடியவர்களை துரத்திச் சென்று பிடித்த ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து சென்னை காவல்துறை ஆணையர் பாராட்டியுள்ளார்.
நேற்றிரவு சென்னை புரசைவாக்கத்தில் மனோன்மணி என்பவர் தனது குடும்பத்தாருடன் சுரேஷ்குமார் என்பவரின் ஆட்டோவில் ஏறினார். எழும்பூர் நாயர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ஆட்டோவில் பயணித்த மனோன்மணியின் கைப்பையை பறித்துச் சென்றனர். அதில் 18,000 ரூபாய் பணம், செல்போன், ஏ.டி.எம். கார்டு மற்றும் பான் கார்டு ஆகியவை இருந்தன.
தப்பியோடிவர்களை விரட்டிச் சென்ற சுரேஷ்குமார் அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது ஆட்டோவை மோதினார். நிலைகுலைந்து கீழே விழுந்த திருடர்களை பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்து எழும்பூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இந்நிலையில், சுரேஷ்குமாரை நேரில் அழைத்த காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், வெகுமதி அளித்து பாராட்டினார். அண்மைக்காலமாக சங்கிலிப் பறிப்பு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க காவல்துறைக்கு பொது மக்கள் உதவும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.