குற்றம்

மண்ணெண்ணெய் கண்ணில் பட்டதால் கதறி அழுத பெண் காவலர்.. தீக்குளிக்க முயன்றவர்களால் விபரீதம்

webteam

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்யும்போது மண்ணெண்ணெய் பெண் காவலரின் கண்ணில் ஊற்றியதால் எரிச்சல் தாங்க முடியாமல் பதறி அழும் அவலம் அரங்கேறியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி ஆலடி சாலையில் உள்ள ஓடை சார் ஆட்சியர் அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள 4.5 ஏக்கர் முல்லா ஏரி மற்றும் ஆர்டிஓ அருகே உள்ள 1.25 ஏக்கர் நீர் பிடிப்பு தளங்கள் பகுதிகளை ஆக்கிரமித்து 130-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் 60க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. பொதுநல வழக்கின் பேரில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனால் தாசில்தார் மற்றும் நகராட்சி கமிஷனர் அடங்கிய அதிகாரிகள் குழு அதிரடியாக கடந்த 23ஆம் தேதி முதல் முல்லா ஏரி ஆக்கிரமிப்பிலிருந்து கடைகளை அகற்றும் பணியில் களமிறங்கினர்.

முதற்கட்டமாக கடைகளின் முகப்பு பகுதிகள் மட்டும் இடிக்கப்பட்டன. பின்னர் ராட்சத இயந்திரம் மூலம் கட்டடங்கள் முழுவதும் இடிக்கப்படும் என்று முன்கூட்டியே எச்சரித்து சென்றனர். அதன்படி இன்று காலை ஐந்தாவது நாளாக அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்றும் பணியை தீவிரமாக நடத்தினர்.

மாவட்ட உதவி கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் தலைமையிலான 200 -க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் இருந்து மின்சார சாதன பொருட்கள் உடைமைகளை தாங்களாகவே அப்புறப்படுத்தி ஒத்துழைப்பு கொடுத்தனர்.

இந்நிலையில் திடீரென்று இந்திரா நகர் பகுதியில் இருந்து இருபதுக்கும் மேற்பட்டோர் மண்ணெண்ணெய் கேன் உடன் வந்து மண்ணெண்ணெயை மேலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். மேலும் அங்கு கூடியிருந்தவர்கள் மேலேயும் பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றனர். இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டதில் கண்ணெரிச்சல் ஏற்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இப்பகுதியில் பதட்டம் நிலவி வந்ததால் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது.