குற்றம்

நாமக்கல்: இரவு சோதனையில் ஆந்திராவிலிருந்து கடத்தப்பட்ட 300 கிலோ கஞ்சா சிக்கியது

நாமக்கல்: இரவு சோதனையில் ஆந்திராவிலிருந்து கடத்தப்பட்ட 300 கிலோ கஞ்சா சிக்கியது

கலிலுல்லா

ஆந்திராவிலிருந்து நாமக்கல் வழியாக சட்டவிரோதமாக கடத்திச்செல்லப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான 300 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட 7 பேரையும் 3 வாகனங்களையும் நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் டாகுர், மாவட்டக் காவல் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், ''நாமக்கல் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் இரவு நடத்திய வாகன சோதனையின் போது நாமக்கல் மற்றும் குமாரபாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக கஞ்சா பொருட்களை கடத்தி சென்ற 7 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த 300 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் 3 கார்களை காவல் துறையினரால் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், ஜெயச்சந்திரன், முகேஷ், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர்குமார், அப்துல் ஜலீல், முஜிப் இரகுமான், சுல்தான் ஆகிய 7 நபர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த நபர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து தேனி மற்றும் கோவை மாவட்டங்களில் விற்பனை செய்வதற்காக, நாமக்கல் மாவட்டம் வழியாக கஞ்சாவை கொண்டு சென்றது தெரியவந்தது'' என்றும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் டாகுர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடந்தாண்டு கஞ்சா கடத்திய வழக்கில் 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.