குற்றம்

ஏடிஎம் கொள்ளை: டெல்லியில் கைதுசெய்யப்பட்ட வீரேந்தர் ராவத் சென்னை கொண்டுவரப்பட்டார்

ஏடிஎம் கொள்ளை: டெல்லியில் கைதுசெய்யப்பட்ட வீரேந்தர் ராவத் சென்னை கொண்டுவரப்பட்டார்

Veeramani

தமிழகத்தில் நடந்த ஏடிஎம் கொள்ளை தொடர்பாக டெல்லியில் கைது செய்யப்பட்ட வீரேந்தர் ராவத் என்பவர் சென்னை கொண்டுவரப்பட்டார்.

தமிழகத்தையே அதிர்ச்சியில் உறையவைத்த இந்த தொடர் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒரு தனிப்படை ஹரியானாவில் முகாமிட்டு ஏற்கனவே அமீர் அர்ஷ் என்பவரை கைதுசெய்த நிலையில், தற்போது டெல்லியில் கைது செய்யப்பட்ட வீரேந்தர் ராவத் என்பவர் விமானம் மூலமாக சென்னை கொண்டுவரப்பட்டார். இவரை நேரடியாக காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏடிஎம் கொள்ளையில் ஏற்கனவே ஹரியானாவில் கைதுசெய்யப்பட்ட அமீர் அர்ஷ் என்பவரை, 5 நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் 15 ஏடிஎம்கள், கிருஷ்ணகிரி 3, காஞ்சிபுரம், திருவண்ணாமலை,வேலூர் மாவட்டங்களில் தலா ஒரு ஏடிஎம் என தமிழகத்தில் மொத்தம் 21 எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க சென்னை காவல்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய காவல்துறையினர், இந்த கொள்ளையில் 9 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டதை உறுதி செய்தனர்.

ஹரியானாவில் முகாமிட்டு தேடுதலை தொடர்ந்துவரும் தனிப்படை போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட மற்ற நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொள்ளை கும்பலின் தலைவன் யார் என்பதை அறியும் முயற்சியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.