ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரை அணுக வேண்டும் என்ற அறிவிப்பை தெரிந்து கொள்ளாமல் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் 13 இடங்களில் கிளைகளை கொண்ட ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம், முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி, 1,678 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.
அவ்வாறு வசூலித்த பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு திரும்பக் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிறுவனத்தின் இயக்குனர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் விவரங்களையும், பணத்தையும் தங்களுக்கு வழங்கக்கோரி முதலீடு செய்தவர்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு திரண்டனர். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட அனுமதி கோரி எஸ்பிளானேடு காவல் நிலையம் அருகே கூடியவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்காத நிலையில் கலைந்து சென்றனர். இதனை ஏற்றுக்கொண்டும், மாவட்ட வருவாய் அலுவலரை அணுக வேண்டுமென அரசு வெளியிட்ட அறிவிப்பு குறித்து வழக்கறிஞர்கள் கூறியதையும் ஏற்றுக்கொண்டு கலைந்து சென்றனர்.