வசூல் செய்த பணத்தை சிட்பண்டு நிறுவனத்துக்கு செலுத்தாமல் ஏமாற்றி மோசடி செய்த முன்னாள் ஊழியரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்த அசோக் ஷா என்பவரின் மகன் குணால் ஷா. செல்போன் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வரும் இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் புரசைவாக்கத்தில் இருக்கும் குருவாயூரயப்பன் சீட்பண்ட் பிரைவேட் லிமிடெட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு தினமும் 15,000 வீதம் ஒரு வருட காலத்திற்கு தினசரி சீட்டு கட்டி வந்தேன். ஏன்னிடமிருந்து பணத்தை வசூல்செய்த நிறுவனத்தின் ஊழியரான டேணி பாபு அதற்குரிய ரசீதுகளும் கொடுத்து வந்தார்.
வருட இறுதியில் சிட்பண்டில் முதிர்வு பெற்ற சீட்டுத்தொகை ரூ.54,75,000 கேட்டபோது சீட் தங்களது நிறுவனத்தில் செயல்படவில்லை. மேலும் டேணிபாபு என்பவர் கடந்த ஆண்டே வேலையிலிருந்து ராஜினாமா செய்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் டேணி பாபுவிடம் ஏமாந்துவிட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு மோசடி புலனாய்வு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கேளம்பாக்கத்தைச் சேர்ந்த டேணி பாபு (39) போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட டேனிபாபு மோசடி செய்தது தெரியவந்ததை அடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தி சிறையில் அடைத்தனர்.