நரியை வேட்டையாடும் நோக்கில், நாட்டு வெடி வைத்தவர்கள் pt desk
குற்றம்

அரியலூர்: நரியை வேட்டையாட வைக்கப்பட்ட நாட்டு வெடி... இரு வளர்ப்பு நாய்கள் உயிரிழப்பு; இருவர் கைது!

அரியலூரில் நரியை வேட்டையாட ஆட்டு கொழுப்பை தடவி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடியை கவ்விய 2 வளர்ப்பு நாய்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

webteam

செய்தியாளர்: வெ.செந்தில்குமார்

அரியலூர் மாவட்டம் சன்னாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். மீன் வியாபாரியான இவர் கடந்த மாதம் 35 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 3 ராஜபாளையம் நாய்களை வாங்கி வளர்த்து வந்துள்ளார். நாள்தோறும் 3 வளர்ப்பு நாய்களையும் வாக்கிங் அழைத்துச் செல்வதை வழக்கமாகவும் வைத்திருந்திருக்கிறார்.

ராஜபாளையம் நாய்

அவ்வாறு நாய்கள் வாக்கிங் சென்ற போது, கலிங்கமேடு பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் நாய்கள் இருந்த நேரத்தில் வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயபால், அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது இரண்டு நாய்களும் வாய் கிழிந்த நிலையில், இறந்து கிடந்துள்ளன.

இதையடுத்து அங்கு சந்தேகப்படும்படி இருந்த இருவரை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது அவர்கள் நரியை பிடிப்பதற்காக நாட்டு வெடியில் ஆட்டு கொழுப்பை தடவி வைத்திருந்ததாகவும், அதனை நாய்கள் கடித்ததால் வெடித்து இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Arrested

இதுகுறித்து வெங்கனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் மலைப்பநகரை சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் சுரேஷ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.