லஞ்ச ஒழிப்பு சோதனை புதிய தலைமுறை
குற்றம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடி ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்பு துறையினர்.. சிக்கிய அதிகாரிகள்!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

PT WEB

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி மாவட்ட விற்பனைக்குழு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ் பாபு தீபாவளி வசூல் செய்ததாக புகார் எழுந்த நிலையில்,  திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் துணை வட்டாட்சியர் பிரேம்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஒன்பது லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், தேனி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.  3 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த  சோதனையில் முக்கிய ஆவணங்கள், பணப் பரிவர்த்தனை தொடர்பான ரசீதுகள் சிக்கியதாக கூறப்படுகிறது. டாஸ்மாக் வெளிகடைகளுக்கு அனுப்ப சோதனை காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற சோதனையில், ஒப்பந்ததாரர்கள், கவுன்சிலர்கள் என 2க்கும் மேற்பட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கணக்கில் வராத பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்லில் மின்சார வாரிய நிர்வாக பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். முன்னதாக  மின்சார வாரிய நிர்வாக பொறியாளர் காளிமுத்துவின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் கணக்கில்
வராத ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பொன்னகரத்தில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த காளிமுத்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.