குற்றம்

சாத்தான்குளம்: “போலீஸ் தாக்கியதில் என் மகன் உயிரிழந்துவிட்டான்”- மற்றொரு பெண் புகார்

சாத்தான்குளம்: “போலீஸ் தாக்கியதில் என் மகன் உயிரிழந்துவிட்டான்”- மற்றொரு பெண் புகார்

webteam

தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்படும் அதே சாத்தான்குளம் காவல்நிலைத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தனது மகன் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக பெண் ஒருவர் வேதனையுடன் குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பேய்குளம் பகுதியில் வசிப்பவர் வடிவம்மாள். இவர், சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் மற்றும் அவரது பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் படை தனது மகன் உயிரையும் பறித்துவிட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். கடந்த மே 18-ஆம் தேதி வெங்கடேஸ்வரபுரம் 6 வது வார்டு உறுப்பினர் ஜெயக்குமார் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் வடிவம்மாளின் மூத்த மகன் துரையும் சம்பந்தப்பட்டுள்ளார் எனக்கூறி சாத்தான்குளம் காவல்துறையினர் தேடிவந்துள்ளனர். அவர் கிடைக்காத நிலையில் வடிவம்மாளின் இரண்டாவது மகன் மகேந்திரனை அவரது பாட்டி வீட்டில் வைத்து காவல் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளனர்.

அடுத்த நாள் துரை காவல்நிலையத்தில் சரணடைந்ததும் அன்றைய இரவே மகேந்திரன் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் வீட்டிற்கு வந்த மகேந்திரனுக்கு உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். தாக்கப்பட்டதை வெளியே கூறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என காவலர் ரகுகணேஷ் மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர், காயங்களால் அவதிப்பட்டு வந்த மகேந்திரனை ஜூன் 11 ஆம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 

அங்கு சிகிச்சை பலனிக்காமல் ஜூன் 13 ஆம் தேதி அவர் உயிரிழந்துவிட்டார். காவலர்களின் அச்சுறுத்தலால் பிரேத பரிசோதனை செய்யாமலே உடல் எரியூட்டப்பட்டதாக வடிவம்மாள் கூறுகிறார். துரை மற்றும் மகேந்திரன் மீது இதுவரை எந்த குற்ற வழக்குகளும் கிடையாது எனவும் காவல் ஆய்வாளர் பொய் புகார் போட்டு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார் என உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மகேந்திரனின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு ஊர் பொதுமக்கள் வழக்கறிஞரை நியமித்து சட்டப்போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.