குற்றம்

சென்னை எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை - சூடு பிடிக்கும் விசாரணை; டெல்லியில் மேலும் ஒருவர் கைது

சென்னை எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை - சூடு பிடிக்கும் விசாரணை; டெல்லியில் மேலும் ஒருவர் கைது

rajakannan

சென்னையில் எஸ்பிஐ ஏடிஎம்களில் நடைபெற்ற நூதன கொள்ளை தொடர்பாக டெல்லியில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் எஸ்பிஐ ஏடிஎம்களில் நடைபெற்ற நூதன கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அமீரிடம் காவல்துறையினர் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். 6 இடங்களில் நண்பர் வீரேந்தருடன் சேர்ந்து வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக அமீர் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தகவல் வெளியாகியுள்ளது.

ராமாபுரம், சின்மயா நகர், பாண்டிபஜார், வடபழனி, வேளச்சேரி, தரமணி கிளைகளில் மட்டும் கொள்ளையில் ஈடுபட்டதாகவும், கொள்ளையடித்த பணத்தை ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தியதாகவும் அமீர் வாக்குமூலம் அளித்திருப்பதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கு யாருடையது என்பது குறித்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றப் பகுதிகளில் கொள்ளையடித்தவர்கள் யார், அவர்களை பின்னால் இருந்து இயக்குவது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஹரியானாவின் மேவாட் பகுதியைச் சேர்ந்த வீரேந்தர் என்பவர் டெல்லியில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே கைதான அமீர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது நண்பரான வீரேந்தர் சிக்கியுள்ளார். சென்னையில் இருவரும் அறை எடுத்து தங்கி ஏடிஎம் கொள்ளையை அரங்கேற்றியதாக அமீர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்து இருந்தார்.