ஆண்டிபட்டி வட்டாட்சியர் கைது pt desk
குற்றம்

தேனி: தடையில்லா சான்று வழங்க ரூ1 லட்சம் லஞ்சம் - கையும் களவுமாக சிக்கிய ஆண்டிபட்டி வட்டாட்சியர் கைது

webteam

செய்தியாளர்: மலைச்சாமி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் துவங்குவதற்கு தடையில்லா சான்று வழங்க மதுரையை சேர்ந்த சுப்பிரமணி என்பவரிடம் ஆண்டிப்பட்டி வருவாய் வட்டாட்சியர் காதர் ஷெரீப் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரிடம் 1 லட்சம் ரூபாய் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர்.

ஆண்டிபட்டி வட்டாட்சியர் காதர் ஷெரீப்

இந்நிலையில், சுப்பிரமணி கொடுத்த பணத்தை ஆண்டிபட்டி வட்டாட்சியர் நேரில் பெற்றதும் தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணைக்காவல் கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் தலைமையிலான காவல்துறையினர் கையும் களவுமாக அவரை பிடித்தனர். இதையடுத்து வட்டாட்சியரிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது வட்டாட்சியருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து உடனடியாக அவர், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு உயர் அழுத்தம் ஏற்பட்டு மூன்று நாட்களாக அதற்கான சிகிச்சையும், முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தற்போது உடல் நலம் தேறினார். இதையடுத்து லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆண்டிபட்டி நீதிபதி பார்வைக்கு பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரால் தேக்கம்பட்டி பகுதியில் உள்ள தேனி மாவட்ட சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு வட்டாட்சியர் காதர் ஷெரீப் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது